தமிழ்நாடு

நூல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

18th Jan 2022 12:51 PM

ADVERTISEMENT

 

திருப்பூர்: நூல் விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரில் அனைத்து தொழில் அமைப்புகள் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும், கடந்த ஜனவரி 1 ஆம் தேதி அனைத்து ரக நூல்களுக்கும் கிலோ ரூ.30 வரையில் உயர்ந்துள்ளது. இதனால் பின்னலாடை உற்பத்தித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிக்க.. கரோனா பேரிடரால் பல சாதனைகளை முறியடித்த டோலோ-650 விற்பனை

ADVERTISEMENT

இதையடுத்து, திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி மற்றும் அதனைச்சார்ந்த நிறுவனங்கள் 2 நாள் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தை ஏற்கனெவே அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின்படி திருப்பூரில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று நிட்மா(பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கம்) அறிவித்திருந்தது. ஆனால் இந்தப் போராட்டத்துக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக அனைத்து தொழில் அமைப்புகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நிட்மா தலைவர் அகில் எஸ்.ரத்தினசாமி தலைமை வகித்தார். 

இதில், பங்கேற்றவர்கள் கூறியதாவது:
 நூல் விலை உயர்வு காரணமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள ஜவுளித் தொழில் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே, பஞ்சு, நூல் ஏற்றுமதியை மத்திய அரசு தடை தடை செய்ய வேண்டும். இந்திய பருத்திக் கழகம் நூற்பாலைகளுக்கு நியாயமான விலையில் பஞ்சை விற்பனை செய்வதுடன், 6 மாதங்களுக்கு ஒரு முறை விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றனர். 
இந்த ஆர்ப்பாட்டத்தில், நிட்மா செயலாளர் சீமன்ஸ் ஆர்.ராஜாமணி, சைமா பொதுச் செயலாளர் எம்பரர் பொன்னுசாமி, டீமா தலைவர் எம்.பி.முத்துரத்தினம், திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.காந்திராஜன், சிஐடியூ, ஏஐடியூசி, எம்.எல்.எஃப், எல்.பி.எஃப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT