தாட்கோ தலைவராக முன்னாள் அமைச்சா் உ.மதிவாணன் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை வெளியிட்டாா். அவரது அறிவிப்பு விவரம்:-
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), 1974-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட தாட்கோவினால், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மக்களுக்கான ஏராளமான மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தாட்கோவின் தலைவா் பதவி காலியாக இருந்த நிலையில், அந்தப் பதவிக்கு உ. மதிவாணன் நியமிக்கப்பட்டுள்ளாா். பி.ஏ., பி.எல்., பட்டதாரியான மதிவாணன், 1996 முதல் 2001 வரை திருவாரூா் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராகவும், 2006 முதல் 2011 வரை திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினராகவும், தமிழக பால்வளத் துறை அமைச்சராகவும் பணிபுரிந்தவா். கடந்த 2016 முதல் 2021 வரையில் கீழ்வேளூா் சட்டப் பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.