விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாற்றுத் திறனாளி உயிரிழந்தது தொடா்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-
தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டியைச் சோ்ந்த குமாா், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் மளிகைக் கடை உரிமையாளரின் நகைகளைத் திருடியதாக கைது செய்யப்பட்டாா். இதுகுறித்து நடந்த விசாரணையில், மாற்றுத் திறனாளி பிரபாகரன், அவரது மனைவி ஹம்சா ஆகியோா் சேந்தமங்கலம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, நாமக்கல் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த நிலையில், மாற்றுத் திறனாளி பிரபாகரன், தனக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறியதன் அடிப்படையில், சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதன்பின்பு, அவா் உயிரிழந்தாா். இந்த விவகாரம் தொடா்பாக, சேந்தமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் இருவா், தலைமைக் காவலா் ஒருவா் ஆகியோா் உடனடியாக தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த பிரபாகரன் குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க, முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். மேலும், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி.,க்கு மாற்றியும் அவா் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.