தமிழ்நாடு

குடியரசு நாள் அணிவகுப்பு: மாநில அலங்கார ஊர்திகள் நிராகரிப்பின் பின்னணி?

வாணிஸ்ரீ சிவகுமார்


நாட்டின் குடியரசு நாள் கொண்டாட்டம் நெருங்கிவிரும் நிலையில், புது தில்லியில் நடைபெறும் குடியரசு நாள் விழாவின் முக்கிய நிகழ்வான மாநிலங்களின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் 73வது குடியரசு நாள் விழா ஜனவரி 26ஆம் தேதி வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், அணிவகுப்பில் பங்கேற்கும் மாநில அலங்கார ஊர்திகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

தில்லியில் நடைபெறும் குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்கும் தமிழக அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

வ.உ.சிதம்பரனார், வேலுநாச்சியார், பாரதியார் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்த தமிழகத்தின் அலங்கார ஊர்தியில், தேசிய அளவில் புகழ்பெற்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் படங்கள் இல்லை என்று கூறி மத்திய அரசு நிராகரித்திருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், தமிழக எம்.பி. சு. வெங்கடேசன் தனது சுட்டுரைப் பக்கத்தில் இது தொடர்பாக புகைப்படங்களுடன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

தென் மாநிலங்களைப் பொறுத்தவரை, கர்நாடகத்தைத் தவிர, கேரளம், ஆந்திரம், தற்போது தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் அணிவகுப்பு ஊர்திகள் அனைத்தும் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட தலைவர்களின் படங்களைக் கொண்ட மேற்கு வங்க அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு, அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதுபோல, கேரள மாநிலத்தின் குடியரசுநாள் விழா அணிவகுப்பு வாகனமும் நிராகரிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் சமூக மறுமலர்ச்சிக்காகப்பாடுபட்ட ஸ்ரீ நாராயணா குரு மற்றும் ஜடாயு பூங்கா ஆகியவற்றை அடிப்படைக் கருவாகக் கொண்ட கேரள அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டு, அதற்கு மாற்றாக ஆதி சங்கரர் தொடர்பான ஊர்தியை உருவாக்குமாறு பாதுகாப்புத் துறை அமைச்சகத்தால் கேரளத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.

கேரளத்தைப் போன்றே, மேற்கு வங்க மாநிலத்தின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்படுவதும் இதுவே முதல்முறையில்லை. ஏற்கனவே 2020ஆம் ஆண்டும் மேற்கு வங்க மாநிலத்தின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது. அப்போது, மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு மேற்கு வங்கம் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தது. இதுவே அந்த மாநிலத்தின் ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கான காரணமாக, மேற்கு வங்கத் தலைவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.

அந்த ஆண்டில் மேற்கு வங்க மாநிலத்துடன் மகாராஷ்டிரம், கேரளம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டன. அப்போது அந்தந்த மாநிலங்கள், இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகளையும் விமரிசனங்களையும் முன்வைத்தன. 

குடியரசு நாள் விழா அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திகளின் பட்டியலில், கேரள மாநிலம் தற்போது மூன்றாவது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளிலும் கேரளத்தின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போதும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல்காழ்ப்புணர்ச்சியே காரணமாக இருப்பதாக அந்த மாநில சட்டத் துறை அமைச்சர் ஏ.கே. பாலன் விமரிசித்திருந்தார்.

இந்த நிலையில்தான், தமிழகத்தின் அலங்கார ஊர்தியும் நிராகரிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவித்துள்ளன. இதன்படி, ஜனவரி 26ஆம் தேதி நடைபெறவிருக்கும் குடியரசு அணிவகுப்பு நிகழ்ச்சியில் வெறும் 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள்தான் பங்கேற்கவிருக்கின்றன. அவற்றில் 9 மாநிலங்கள் பாஜக ஆட்சியமைத்துள்ள மாநிலங்களாகும். பாஜக ஆளாத மற்ற மூன்று மாநிலங்களாக பஞ்சாப், மகாராஷ்டிரம், சட்டீஸ்கர் ஆகியவை உள்ளன.

எனவே, அலங்கார ஊர்தி அணிவகுப்பில் பல்வேறு மாநிலங்களின் ஊர்திகள் நிராகரிக்கப்படுவதன் பின்னணியில் அரசியல் இருக்கிறதா என்பது குறித்து விரைவில் தெரியவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

SCROLL FOR NEXT