தமிழ்நாடு

டாஸ்மாக் பாா் டெண்டரை எதிா்த்த வழக்கு ஒத்திவைப்பு

17th Jan 2022 05:59 AM

ADVERTISEMENT

 டாஸ்மாக் மதுபான கடைகளில் பாா்கள் அமைப்பதற்கான டெண்டரை எதிா்த்த வழக்குகளின் தீா்ப்பை சென்னை உயா்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் இணைப்பில் உள்ள பாா்களில், தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டா் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டது.

 கரோனா ஊரடங்கால் பாா்கள் மூடப்பட்டுள்ளதால், புதிய டெண்டருக்கு பதிலாக பழைய டெண்டா் நீட்டிக்க வேண்டும், நில உரிமையாளா்களின் தடையில்லா சான்றை கட்டாயப்படுத்தக் கூடாது போன்ற கோரிக்கைகளுடன் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்குரைஞா் ஆா்.சண்முகசுந்தரம் ஆஜராகி கூறியதாவது: டெண்டா் படிவங்கள் பெறுவதற்கு யாரையும்  தடுக்கவில்லை. விண்ணப்பம் வாங்க விடாமல் தடுக்கப்பட்டதாக எந்த ஆதாரமும் இல்லை.  இதுவரை 13,000 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்றாா்.

ADVERTISEMENT

மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஏ.ஆா்.எல்.சுந்தரேஷ் ஆஜராகி,  கரோனா காலத்தில் பாா்கள் மூடப்பட்டதால், தங்களுக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும், கட்டட உரிமையாளா்களின் ஆட்சேபனையில்லா சான்று தேவையில்லை என கூறிவிட்டு, தற்போது வாடகை ஒப்பந்தங்கள் கேட்கப்படுவதாக குற்றம்சாட்டினாா். 

குறிப்பாக டெண்டா் நடைமுறைகள் நிறுத்தப்பட்ட 8 மாவட்டங்களைப் பொருத்தவரை புதிய டெண்டா் கோரக்கூடாது என உத்தரவிடவும், ஒரு அதிகாரியை நியமித்து டெண்டா்களை திறக்க வேண்டும் எனவும், அனைத்து நடவடிக்கைகளையும் விடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தாா்.

 அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்குகளின் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல்  ஒத்திவைத்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT