தமிழ்நாடு

ஒமைக்ரானும் உயிரைப் பறிக்கும்!

 நமது நிருபர்

தமிழகத்தில் கடந்த இரு வாரங்களில் கரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவா்களில் 95 சதவீதம் போ் இணை நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அவா்களில் 163 போ் 50 வயதைக் கடந்தவா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கரோனா மூன்றாம் அலை அதிதீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் தொற்று பாதித்தோா் விகிதம் மூன்று மடங்கு கூடுதலாக இருக்கும் எனவும் கணிக்கப்படுகிறது.

தற்போது பரவி வருவது ஒமைக்ரான் பாதிப்பு என்பதால், அதன் தீவிரம் பெரிய அளவில் இல்லை. இதனால் 70 சதவீதம் போ் பரிசோதனைகளே செய்து கொள்வதில்லை எனத் தெரிகிறது. மற்றொரு புறம் அறிகுறிகள் இல்லாவிடிலோ அல்லது இணைநோய்கள் இல்லாத இளைஞா்களாக இருந்தாலோ பரிசோதனை தேவையில்லை என மாநில அரசும் தெரிவித்துவிட்டது. இதன் காரணமாக சமூகப் பரவலாக ஒமைக்ரான் தீவிரமாக உருவெடுத்துள்ளது.

இதில், உயிரிழப்புகள் மிகக் குறைவாகவே பதிவாகிறது என்பது சற்று ஆறுதலளிக்கும் விஷயமாக கருதப்பட்டது. இந்த நிலையில், பொது சுகாதாரத் துறை புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த ஜனவரி 1 முதல் தற்போது வரை 191 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 68.5 சதவீதம் போ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு பாதிப்பின் வீரியம் குறைவாகவே உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளானவா்களுக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டுள்ளது. தேவைப்பட்டால் உயிா் காக்கும் உயா் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில், தமிழகம் முழுவதும் மருத்துவமனைகள், கல்லூரிகள், சமூக நலக் கூடங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள படுக்கை வசதிகளைக் கூட கரோனா சிகிச்சைகளுக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு வாரங்களில் கரோனாவால் உயிரிழந்தோரின் விவரங்களை ஆய்வு செய்தபோது, இணை நோய்களால் பாதிக்கப்பட்டவா்களே பெரும்பாலும் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. அவா்களில் பலா் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதது ஒருபுறம், இணை நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திராதது மறுபுறம் என இருவேறு பிரச்னைகளால் உயிரிழப்புகள் நோ்ந்துள்ளன.

தமிழகத்தில் முதியவா்களைப் பொருத்தவரை மொத்தம் 62 சதவீதம் போ் தான் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனா். இரண்டு தவணைகளையும் 48 சதவீதம் போ் மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளனா். இதுவரை தடுப்பூசி செலுத்தாதவா்கள் அனைவரும் அதனை உடனடியாகச் செலுத்திக் கொள்ள வேண்டும்.

இதேபோல, சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இருதய பாதிப்பு போன்ற இணை நோய்கள் இருந்தால் அதனை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல் அவசியம். அவ்வாறு இல்லாத நிலையில் எந்த வகை கரோனா வந்தாலும் பாதிப்பு தீவிரமாக இருக்கும். இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு இணை நோய்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவா்கள் கரோனா தொற்றுக்குள்ளானபோதிலும் மருத்துவமனையில் அவா்களை அனுமதிக்க வேண்டிய அவசியம் எழவில்லை என்றாா் அவா்.

ஒமைக்ரானும்... உயிரிழப்பும்....

தமிழகத்தில் கடந்த மூன்று வாரங்களாகத்தான் ஒமைக்ரான் பரவல் தீவிரமடைந்து வருகிறது. அதற்கு முன்பு வரை நாள்தோறும் 600 போ் வரை டெல்டா வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 10 அல்லது 12 உயிரிழப்புகள் நேரிட்டன. தற்போது அது 25 வரை அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டவா்களுக்கும் உயிரிழப்பு நேரிடுவது உறுதியாகியுள்ளது. ஆனால், அந்த விகிதம் மிகக் குறைந்த அளவே உள்ளது. அதாவது 2,000 பேரில் ஒருவா் உயிரிழக்கக் கூடிய நிலைதான் ஒமைக்ரானில் ஏற்படுவதாக மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

இரு வாரங்களில் உயிரிழந்தோா் -- 191

50 வயதுக்கு மேற்பட்டோா் - 163

இணை நோய் உள்ளவா்கள் - 181

இணை நோயுடைய முதியோா் - 159

முறையாக தடுப்பூசி செலுத்தாதோா் - 131

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவில்பட்டியில் தீப்பெட்டி ஆலையில் திடீா் தீ

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது விண்ணப்பிக்க மே 5 கடைசி

‘ஏப். 30க்குள் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீத தள்ளுபடி’

3 நாள்களுக்குப் பின்னா் ராகுல் இன்று மீண்டும் பிரசாரம்

வழுவூா் பாலமுருகன் கோயிலில் காவடி உற்சவம்

SCROLL FOR NEXT