தமிழ்நாடு

சிக்கலில் பொறியியல் இறுதியாண்டு மாணவர்கள்: செவிசாய்க்குமா அரசு?

DIN


சென்னை: கரோனா பேரிடர் காரணமாக, அனைத்து கல்லூரிகளிலும் பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பைப் பெற்ற பொறியியல் இறுதியாண்டு மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இறுதியாண்டு பருவத் தேர்வு தள்ளிப்போவதால், மிகப்பெரிய நிறுவனங்களில் தாங்கள் பெற்ற பணிவாய்ப்புகள் தவறிபோகுமோ என்ற அச்சத்தில் அவர்கள் இருக்கிறார்கள்.

இறுதியாண்டுத் தேர்வு முடிந்ததும், குறிப்பிட்ட நிறுவனங்களில் பணிவாய்ப்பை ஏற்க வேண்டிய சூழலில் இருக்கும் மாணவர்கள், தங்களது பருவத் தேர்வு தள்ளிப்போவதால் உறக்கமில்லாத இரவுகளை சந்தித்துவருகிறார்கள்.

இறுதியாண்டுத் தேர்வு நடைபெறுவதற்குள், பணியில் வந்து சேர்வதற்கான காலக்கெடு நிறைவடைந்துவிடுமோ என்ற அச்சமே அதற்குக் காரணம். நாங்கள் இன்னமும் ஏழாவது மற்றும்  எட்டாவது பருவத் தேர்வுகளை எழுதவில்லை. எப்போது இந்த தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தெரியவில்லை.  ஒருவேளை ஏதேனும் ஒரு தேர்வில் தோல்வியடைந்துவிட்டாலும் கூட, அந்த அரியர் தேர்வை எப்போது எழுதுவோம்? பருவத் தேர்வுகளில் தேர்ச்சியடையாவிட்டால், எங்களுக்கு வழங்கப்பட்ட பணி வாய்ப்பு தானாகவே ரத்தாகிவிடுமா? என்ற ஆயிரம் கேள்விகளுடன் கண்ணுறக்கம் இல்லாமல் காத்திருக்கிறார்கள் பொறியியல் இறுதியாண்டு மாணவர்கள்.

சில மாணவர்களோ, நாங்கள் கல்விக் கடன் பெற்றுதான் பொறியியலில் சேர்ந்தோம். பணி வாய்ப்பு ஒன்றுதான் அதனை அடைக்க ஒரே வழி. டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுவிட்டன. இப்போது என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை என்கிறார்கள் சில தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள்.

இது குறித்து தனியார் பொறியியல் கல்லூரியில் பணியாற்றுவோர் கூறுகையில், பொதுவாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பொறியியல் மாணவர்களுக்கு மே அல்லது ஜூன் வரைதான் கால அவகாசம் வழங்கும். தற்போது அவர்களுக்கு அதிகப்படியான ஊழியர்கள் உடனடியாகத் தேவை என்பதால், அவர்கள் கால அவகாசத்தை நீட்டிக்க வாய்ப்பில்லை. எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு இறுதியாண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வு நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தும் உள்ளனர்.

இதுபோலவே, கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கும், தங்களுக்கு மட்டுமாவது இறுதிப் பருவத் தேர்வை ஆன்லைனில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

பொறியியல் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பலரும், கையில் வேலை வாய்ப்புக்கான அழைப்பாணையை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலரோ வெளிநாடுகளில் மேல்படிப்புக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே, தமிழக அரசு இவர்களது விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த இறுதியாண்டு மாணவர்களின் சார்பாக வைக்கப்படும் வேண்டுகோளாகும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT