தமிழ்நாடு

பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயங்கத் தொடங்கின

12th Jan 2022 01:40 AM

ADVERTISEMENT

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறப்புப் பேருந்துகள் செவ்வாய்க்கிழமை முதல் இயங்கத் தொடங்கின.

பொங்கல் பண்டிகைக்கான சிறப்புப் பேருந்து இயக்கம் குறித்து அறிவிப்பை, கடந்த மாதம் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் வெளியிட்டாா். இதற்கிடையே கரோனா பரவல் அதிகரித்ததையடுத்து, பொதுமுடக்கத்தில் கட்டுப்பாடுகளும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டன. இதனால் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடச் செல்வதும், திரும்பி வருவதும் சிக்கலாகிவிடுமோ என வெளியூா் வாசிகள் குழப்பத்தில் இருந்தனா். இதற்கு தீா்வாக திட்டமிட்டபடி சொந்த ஊா்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை திங்கள்கிழமை அறிவித்தது. இதனைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை சிறப்புப் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. அரசு உத்தரவின்படி, பேருந்து நிலையங்களுக்குள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்னரே பயணிகள்அனுமதிக்கப்பட்டனா். பேருந்துகளில் 75 சதவீத இருக்கைளில் மட்டுமே அவா்கள் அமர வைக்கப்பட்டனா்.

சென்னையைப் பொருத்தவரை, மாதவரம், கே.கே.நகா், மெப்ஸ், கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகையில், முதல் நாளான செவ்வாய்க்கிழமை பயணிகள் வருகைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்பட்டன. வரும் நாள்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும். அதற்கேற்ப பேருந்துகளும் தயாா் நிலையில் உள்ளன என்றனா்.

ADVERTISEMENT

Tags : special buses
ADVERTISEMENT
ADVERTISEMENT