தமிழ்நாடு

கரோனா சூழலில் ஜல்லிக்கட்டு அவசியமா?

12th Jan 2022 03:27 AM |  சிவ.மணிகண்டன்

ADVERTISEMENT

கரோனா மூன்றாவது அலை வேகமாகப் பரவி வரும் சூழலில், ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்துவது அவசியமா என்று கேள்வி எழுந்துள்ளது.
 பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போன்ற பெயர்களிலும், வடமாவட்டங்களில் எருதுவிடுதல் என்ற பெயரிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
 மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டி பிரபலமானது. அதிலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ்பெற்றது. தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் இந்தப் போட்டியைக் காண வருவர்.
 தைப் பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கல் நாளில் பாலமேட்டிலும், அதன் மறுநாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு வழக்கமாக நடைபெறும். நிகழ் ஆண்டில் முறையே ஜனவரி 14, 15 மற்றும் 17 -ஆம் தேதிகளில் (ஜனவரி 16-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜன.17-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.) மேற்குறிப்பிட்ட இடங்களில், கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. மாடுபிடிவீரர்கள் 300 பேர், பார்வையாளர்கள் 150 பேர், 700 காளைகள் பங்கேற்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
 ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரர்கள், காளைகள், பார்வையாளர்கள் என்பது மட்டுமே வெளிப்படையாகத் தெரியக்கூடியது. ஆனால், அரசு இயந்திரத்தின் ஒரு பகுதியானது ஜல்லிக்கட்டு நடைபெறும் ஊரில் முகாமிட்டிருக்கும். குறிப்பாக, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது அனைத்து உயர்அதிகாரிகளும் அங்கு பணியில் இருப்பர். அவர்களுடன் வருவாய், காவல், பொது சுகாதாரம், கால்நடைப் பராமரிப்பு, தீயணைப்பு, பொதுப்பணி, உள்ளாட்சி நிர்வாகங்கள் என பல்வேறு துறைகளின் அலுவலர்கள், பணியாளர்களுக்கு ஜல்லிக்கட்டு தொடர்பான பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
 தற்போது, பார்வையாளர்களின் எண்ணிக்கை மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் 150 பேர் என்பது ஜல்லிக்கட்டு ஆரம்பத்தில் இருந்து முடியும் வரையிலா அல்லது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை 150 பேருக்கு சுழற்சி முறையில் அரங்கத்தில் அனுமதியா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. மற்றபடி மாடுபிடி வீரர்கள், காளைகள் எண்ணிக்கையானது வழக்கம்போலவே உள்ளது.
 ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண வருபவர்களைக் கட்டுப்படுத்துவது சிரமமானது. போட்டி அரங்குக்குள் வராவிட்டாலும் போட்டி நடைபெறும் கிராமங்களில் அவர்கள் கூடுவதைத் தவிர்க்க இயலாது.
 ஜல்லிக்கட்டுக்காக சுமார் 2,000 போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்படுவர். தற்போது கூடுதல் கட்டுப்பாடுகள் இருப்பதால் போலீஸார் அதிகம் தேவைப்படுவர். கடந்த ஆண்டில் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டின் எண்ணிக்கை 500-ஐத் தாண்டியது குறிப்பிடத்தக்கது.
 "கடந்த ஆண்டிலும் கரோனா தொற்று பரவலுக்கு இடையே ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும், தற்போதுள்ள தீவிரப் பரவல் இல்லை. நிகழ் ஆண்டில் பார்வையாளர்களைத் தவிர மற்ற தரப்பினரின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு. இத்தகைய சூழலில் ஜல்லிக்கட்டு நடத்துவது அவசியமா' என அரசு அலுவலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
 ஜல்லிக்கட்டுக்கு வரக்கூடிய நபர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு இரு நாள்கள் முன்பு பரிசோதனை செய்து தொற்று இல்லை என சான்று பெற்றிருப்பது அவசியம். இதனால், புதன்கிழமை முதல் ஜல்லிக்கட்டு தொடர்புடைய நூற்றுக் கணக்கானோர் கரோனா பரிசோதனைக்குச் செல்வர். இந்த நிலை சனிக்கிழமை வரை நீடிக்கும். ஆய்வகத்திலும் ஜல்லிக்கட்டுக்காக கபம் மாதிரிகள் அளித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இச்சூழலில் கரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு தாமதமாகக் கூடும். அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தும் சூழலில், பரிசோதனை முடிவுகள் தாமதப்படுத்துவது ஏற்புடையதல்ல.
 பாரம்பரியமாக நடைபெறக் கூடிய ஜல்லிக்கட்டுப் போட்டி தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காகவே கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு பாரம்பரிய நிகழ்வுகள், பொதுமக்கள் பங்கேற்பின்றி தான் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
 திறந்தவெளி மைதானங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஜல்லிக்கட்டுப் போட்டியானது திறந்தவெளி மைதானத்தில் நடைபெறக் கூடிய பிற விளையாட்டுகளைப் போல அல்ல. இதில் பங்கேற்பாளர்களைக் கட்டுப்படுத்துவதும், தனிநபர் இடைவெளியைப் பின்பற்ற வைப்பதும் மிகக் கடினமானது.
 கரோனா தொற்று ஏற்கெனவே தீவிரமாகப் பரவும் சூழலில், அதை மேலும் வேகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கக் கூடிய ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது அவசியம் தானா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

Tags : Jallikattu
ADVERTISEMENT
ADVERTISEMENT