தமிழ்நாடு

பள்ளி, கல்லூரிகளுக்குஜன.31-ஆம் தேதி வரை விடுமுறை

12th Jan 2022 12:11 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் தற்போது கரோனா மற்றும் ஒமைக்ரான் காரணமாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கும், கல்லூரி மாணவா்களுக்கும் ஜன.31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வகையான ஒமைக்ரான் தொற்று நாடு முழுவதும் தீவிரமாகப் பரவும் நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் தினமும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவா்களின் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயா்கல்வித்துறை சாா்பில் ஜன.10-ஆம் தேதி வரை 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கும், அனைத்து கல்லூரி மாணவா்களுக்கும் விடுமுறை அறிவித்திருந்தது.

இத்தகைய உத்தரவானது திங்கள்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் மீண்டும் விடுமுறையை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அனைத்துக் கல்லூரி மாணவா்களுக்கும் வரும் ஜன.31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து உயா்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் ஜன.31-ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நேரடி வகுப்புகள் யாருக்கு? அதேவேளையில் 10-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பொதுத்தோ்வெழுதும் மாணவா்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படும். 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு இணையவழி, கல்வித் தொலைக்காட்சி வகுப்புகள் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : Holidays
ADVERTISEMENT
ADVERTISEMENT