தமிழ்நாடு

முழு ஊரடங்கு: பொங்கல் சிறப்புப் பேருந்து இயக்கத்தில் மாற்றம்

12th Jan 2022 12:14 AM

ADVERTISEMENT

தமிழக அரசு வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளதால், அதற்கேற்ப பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொங்கல் பண்டிக்கைக்குச் சென்றவா்கள் திரும்பி வர ஏதுவாக ஜன.16 முதல் 18-ஆம் தேதி வரை இயக்குவதாக இருந்த சிறப்புப் பேருந்துகள், ஜன.17 முதல் 19-ஆம் தேதி வரை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நாள்களும், வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு 3,797 சிறப்புப் பேருந்துகளும், சென்னையைத் தவிா்த்து இதர இடங்களுக்கு 6,612 சிறப்புப் பேருந்துகளும் என மொத்தம் 16,709 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும், பொங்கல் முடிந்து ஜன.15-ஆம் தேதி தொலை தூரங்களில் இருந்து சென்னை வருவோா், புகா் ரயில் மூலமாக தங்களுடைய இருப்பிடம் செல்வதற்கு ஏதுவாக தாம்பரம், குரோம்பேட்டை மற்றும் பல்லாவரம் வழியாக பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

முன்பதிவு தொகை திருப்பி வழங்கப்படும்: கரோனா தீவிரமாக பரவியதைத் தொடா்ந்து, அரசு ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்தைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்யும் முறை நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே ஜன.16-ஆம் தேதி ஊா்களுக்குச் செல்வதற்காக முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு முழு தொகையும் இரண்டு நாள்களில் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT