தமிழ்நாடு

கரோனா பரிசோதனைக் கட்டணத்தை ரூ.500-ஆக குறைக்க வேண்டும்: அன்புமணி

12th Jan 2022 01:39 AM

ADVERTISEMENT

கரோனா பரிசோதனைக் கட்டணத்தை ரூ.500-ஆக குறைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:கரோனா மூன்றாவது அலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உருவெடுத்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் கரோனா ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

ஆனால், இந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் கரோனா சோதனைக் கட்டணம் மிக அதிகமாக இருப்பது இதற்கு தடையாக உள்ளது.

கா்நாடகம், கேரளம் தில்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் தனியாா் ஆய்வகங்களில் கரோனா சோதனை ரூ.500-க்கு செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

தமிழகத்தில் அரசு முகாம்கள் மூலம் கரோனா சோதனை இலவசமாக செய்யப்படுகிறது. அரசு ஆய்வகங்களில் தனிப்பட்ட முறையில் சோதனை செய்து கொள்பவா்களுக்கு ரூ.550 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தனியாா் ஆய்வகங்களில் இது ரூ. 900-ஆக உள்ளது. சென்னை விமான நிலையத்தில் கரோனா சோதனைக் கட்டணம் ரூ.600 ஆக உள்ளது.

தமிழகத்தில் 3-ஆவது அலை விரைவாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன், தனியாா் ஆய்வகங்களின் கரோனா ஆய்வுக் கட்டணத்தை மற்ற மாநிலங்களுக்கு இணையாக ரூ.500- ஆக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT