தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கே டிக்கெட்: ரயில்வே முடிவின் சாதகமும் பாதகமும்

DIN


இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்திக் கொண்டவர்களுக்கே ரயிலில் பயணிக்க டிக்கெட் வழங்கப்படும் என்ற அறிவிப்பினால், முதல் நாளான நேற்று ஆயிரக்கணக்கானோர் ரயில் டிக்கெட் கவுன்டர்களுக்கு வந்து டிக்கெட் எடுக்க முடியாமல், பேருந்து நிலையங்களை நோக்கி ஓடும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

கரோனா தடுப்பூசி இரண்டு தவணையும் செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே ஜனவரி 10ஆம் தேதி முதல் டிக்கெட் வழங்கப்படும் என்று ரயில்வே அறிவிப்பு வெளியிட்டது.

அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட முதல் நாளில், ஏராளமானோர் இந்த அறிவிப்பு குறித்த விவரம் தெரியாமல் வந்து டிக்கெட் எடுக்க முயன்ற போது, அவர்களிடம் தடுப்பூசி சான்றிதழ் கோரப்பட்டது. சிலர் கைவசம் சான்றிதழ்களை வைத்திருந்தும், செல்லிடப்பேசியில் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளை காண்பித்தும் டிக்கெட் பெற்றனர்.

ஆனால், தடுப்பூசி செலுத்தாதவர்களும், முதல் தவணை மட்டும் செலுத்தியவர்களும், கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகள் கைவசம் இல்லாதவர்களும் டிக்கெட் கவுன்டர்களில் நின்று கொண்டு செய்வதறியாது தவித்தனர்.

அது மட்டுமல்ல, இந்த புதிய கட்டுப்பாட்டை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக யுடிஎஸ் செயலி மூலம் டிக்கெட் வழங்கும் சேவையும் முடக்கப்பட்டது. இதனால், டிக்கெட் கவுன்டர்களில் கூட்டம் அலைமோதியது. சிலர் டிக்கெட் எடுக்காமலேயே ரயிலில் பயணிக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

முக்கிய ரயில் நிலையங்களான சென்னை சென்டிரல் ரயில் நிலையம், தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம், பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர் போன்ற பரபரப்பான ரயில் நிலையங்களில் எல்லாம் காலை 5 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று பயணிகள் டிக்கெட் எடுப்பதைக் காண முடிந்தது.

சில டிக்கெட் வழங்கும் மையங்களில், பயணிகளுக்கும், டிக்கெட் வழங்குவோருக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்களும் எழுந்தன. இதனால், சான்றிதழ் வைத்துக் கொண்டு, டிக்கெட் எடுக்கக் காத்திருந்தவர்களும் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

காலை முதல், சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களையும் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் இல்லை என்று கூறி ரயில்நிலையத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் ரயிலில் பயணிக்க அனுமதிக்கலாம் என்று பிறகு அறிவிக்கப்பட்டது. இதனால் சீசன் டிக்கெட் வைத்திருந்தவர்கள் தற்காலிகமாக நிம்மதி அடைந்தனர்.

தடுப்பூசி செலுத்தாத ரயில் பயணிகளிடம் அபராதம் வசூலிக்க சட்டத்தில் இடமில்லை. எனவே, இப்படி தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு டிக்கெட் மறுக்கப்படுவதால், அவர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் நிலை ஏற்படும். அப்போது அவர்களிடமிருந்து அபராதத்தை வசூலித்துக் கொள்ளலாம் என்பதால் ரயில்வே இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதோ என்று சந்தேகிப்பதாக சில பயணிகள் தங்களது கருத்தை முன் வைத்தனர்.

தமிழகத்தில் டிசம்பர் 27ஆம் தேதி நிலவரப்படி 56.6 சதவீதம் பேருக்குத்தான் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அப்படியிருப்பின், இவ்வாறு தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு டிக்கெட் மறுக்கப்படுவது என்பது நியாயமற்றது என்கிறார்கள் பயணிகள்.

எனது தாயை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். நான் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். எனது தாயாருக்கோ அடுத்த மாதம்தான் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆனால் அவருக்கு டிக்கெட் தர முடியாது என்று கூறிவிட்டார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன் என்கிறார் அரக்கோணத்தைச் சேர்ந்த சேகர்.

முதலில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், ரயில்வேயின் இந்த அறிவிப்பினால் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரைவார்கள். அடுத்து, கரோனா இரண்டாம் தவணையை செலுத்திக் கொள்ளாமல் காலம் தாழ்த்தியவர்களும், உடனடியாகச் சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்வது அதிகரிக்கும்.

ஆனால், சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 3 மாதங்களுக்குப் பிறகு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருப்பார்கள். அப்படியிருப்பின், அவர்களுக்கான தவணைக் காலம் இன்னும் வராமல், இருக்கலாம். இப்படிப்பட்டவர்களுக்கு திடீரென ரயிலில் பயணிக்க டிக்கெட் வழங்காமல் இருக்கும் போது, அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏற்கனவே போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில் டிக்கெட் மறுக்கப்பட்டவர்கள் அனைவரும் பேருந்து அல்லது ஆட்டோவில் பயணிக்கும் நிலை உருவாகும். இதனால், பேருந்தில் கூட்ட நெரிசல் ஏற்படுவதுடன், கரோன பரவல் அதிகரிக்கும் அபாயமும் ஏற்படும்.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு, பேருந்தில் ஏற்கனவே கூட்ட நெரிசலில் சிக்கித் திணறும் பயணிகள், இவ்வாறு ரயிலில் பயணம் செய்ய முடியாமல் பேருந்துக்கு வரும் பயணிகளின் கூட்ட நெரிசலால் மேலும் அவதிக்குள்ளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே கரோனா தடுப்பூசி முதல் தவணையை செலுத்திக் கொண்டவர்கள், அவர்களுக்கான தவணைக் காலம் வரும்போதுதான் அடுத்த தவணையை செலுத்திக்கொள்ள முடியும் என்ற நிலையில், அதுவரை நிச்சயமாக ரயிலில் பயணிக்க முடியாத நிலைதான் உருவாகும்.

இதனால், இதர போக்குவரத்துகளில் நெரிசல், கரோனா பரவல் அதிகரிக்கும் அபாயமே அதிகம். எனவே, கரோனா முதல் தவணை செலுத்தியவர்களுக்கு மட்டுமாவது டிக்கெட் வழங்கப்பட்டால், இதுவரை தடுப்பூசியே செலுத்தாதவர்கள், ரயிலில் பயணிக்க வேண்டும் என்பதற்காக, முதல் தவணையை செலுத்திக் கொள்வார்கள். இதனால், தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எதிர்பார்த்த பலனும் கிடைக்கும்.

இரண்டாம் தவணைக் காலம் முடிவுபெற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு வேண்டுமானால் டிக்கெட் வழங்குவதை ரயில்வே நிறுத்திக் கொள்ளலாம். அப்படி செய்யும் போது அவர்கள் உடனடியாக இரண்டாவது தவணையைச் செலுத்த வேண்டியது ஏற்படும். இதனால் இரண்டாவது தவணை செலுத்தாதவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும்  என்று எதிர்பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

சேலை கட்டும் பெண்ணுக்கொரு... மௌனி ராய்...

SCROLL FOR NEXT