தமிழ்நாடு

நாமக்கல் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடக்கம்

4th Jan 2022 12:13 PM

ADVERTISEMENT

 

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 5.37 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு, முழுக் கரும்பு விநியோகம் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் ரூ.505 மதிப்பிலான 20 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு, முழுக் கரும்பு வழங்கும் பணியினை முதல்வர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார். 

அதனைத் தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புகளை வழங்கி வருகின்றனர்.

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் 900 நியாய விலைக் கடைகள் மூலம் 5,37,510 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புகள் செவ்வாய்க்கிழமை முதல் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தினமும் 150 முதல் 200 பேருக்கு பரிசுத் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
இதற்காக வீடு, வீடாகச் சென்று கடை ஊழியர்கள் இரு நாள்களுக்கு முன்பாக டோக்கன் விநியோகம் செய்துள்ளனர். இந்த பொங்கல் பரிசு தொகுப்பில், பச்சரிசி ஒரு கிலோ, வெல்லம் ஒரு கிலோ, முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம், பாசிப்பருப்பு 500 கிராம், நெய் 100 கிராம், மஞ்சள்தூள் 100 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், மல்லித்தூள் 100 கிராம், கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம், மிளகு 50 கிராம், புளி 200 கிராம், கடலை பருப்பு 250 கிராம், உளுத்தம்பருப்பு 500 கிராம், ரவை 1 கிலோ, கோதுமை மாவு 1 கிலோ, உப்பு 500 கிராம், துணிப்பை ஒன்று என 20 பொருள்களும், ஒரு முழுக் கரும்பும் வழங்கப்படுகிறது.

பொட்டலமிட்டு தயார் நிலையில் உள்ள பொருள்கள் நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல் முல்லை நகரில்  உள்ள தொடக்க வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நியாயவிலைக் கடையில் சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்,  எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரூ.29 கோடி மதிப்பீட்டில் இந்த பரிசு தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது. மேலும் 5 லட்சம் பேருக்கு பொங்கல் வேட்டி, சேலை விநியோகமும் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் முல்லை நகரில் பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு வழங்கும் பணியை தொடங்கி வைத்த சுற்றுலாத்துறை அமைச்சர் எம். மதிவேந்தன்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT