தமிழ்நாடு

ஜன. 12ல் புதுச்சேரிக்கும் செல்கிறார் பிரதமர் மோடி

4th Jan 2022 12:14 PM

ADVERTISEMENT

வருகிற ஜனவரி 12 ஆம் தேதி மதுரை பொங்கல் விழாவில் கலந்துகொள்ள தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள இருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தை 1 ஆம் தேதி (ஜனவரி 14) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜனவரி 12 ஆம் தேதி பாஜக சார்பில் மதுரையில் 'மோடி பொங்கல்' நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். தமிழக பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில், பொங்கல் விழாவுக்காக தமிழகம் வரும் பிரதமர் மோடி புதுச்சேரி நிகழ்வுகளிலும் கலந்துகொள்ள இருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார். 

புதுவையில் திங்கள் கிழமை முதல் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பு ஊசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இரண்டாவது நாளாக புதுச்சேரி வைசியாள் வீதியில் உள்ள சுசீலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமினை புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

ADVERTISEMENT

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு இதுவரை 454 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இளைஞர்கள் உற்சாகமாகத் தடுப்பூசி செலுத்திக் கொள்வதைப் பார்த்து, பெரியோர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். புதுவையில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் அதிகப்படியான கட்டுப்பாடுகள் கொண்டு வர வாய்ப்புள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ஜன.12ம் தேதி தொடங்கி நடைபெற உள்ள தேசிய இளைஞர் தின விழாவில், இந்தியாவிலிருந்து 7,500 இளைஞர்கள் பங்கேற்க உள்ளனர். இதனை பிரதமர் மோடி வரும் 12 ஆம் தேதி புதுச்சேரி வருகை தந்து துவக்கி வைக்க உள்ளார்.

புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் விழா நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. அனைவரும் முககவசம் அணிந்து இருக்க வேண்டும். 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற கரோனா வழிமுறைகளை பின்பற்றி விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது என்றார். பொதுப்பணித்துறை அமைச்சர் க.லட்சுமி நாராயணன் மற்றும் அதிகாரிகள்  உடனிருந்தனர்.

ஜன. 12ல் மதுரையில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு

ADVERTISEMENT
ADVERTISEMENT