நாகப்பட்டினம்: நாகை அருகே நெகிழி நாற்காலிகள் விற்பனை செய்யும் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களைத் தாக்கி, ரூ.6.35 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், மன்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 பேர், நாகூர்- வேளாங்கண்ணி கிழக்கு கடற்கரைச் சாலை, நாகையை அடுத்த தெத்தி கிராமத்தில், சாலையோரத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான ஒரு இடத்தில் தங்கியிருந்தபடி நாகை மற்றும் சுற்றுப்பகுதிகளில் நெகிழி நாற்காலிகளை விற்பனை செய்து வந்தனர்.
இவர்கள் வழக்கம் போல் வியாபாரம் முடிந்து, வெள்ளிக்கிழமை நள்ளிரவில் உறங்கிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் அங்கு வந்த 15 மர்ம நபர்கள், வட மாநிலத்தவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அப்போது, அவர்கள் பணம் இல்லையெனக் கூறியதை அடுத்து, மர்ம நபர்கள் வடமாநிலத்தைவர்கள் வைத்திருந்த நாற்காலிகள் மற்றும் வாகனங்களை அடித்து சேதப்படுத்தியுள்ளனர். பின்னர் கத்தியைக் காட்டிக் கொலை செய்து மிரட்டி அவர்கள் வசமிருந்த ரூ.6.35 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 6 கைப்பேசிகளையும் பறித்துச் சென்றுள்ளனர். சேதமடைந்த நெகிழி நாற்காலிகளின் மதிப்பு ரூ. 2.50 லட்சம் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரலாத் மீனா என்பவர் கூறியது: தமிழகத்தை நம்பி வந்து பிழைப்பு நடத்தி வருகிறோம். ஒரு நாற்காலி விற்பனை செய்தால் ரூ.30 மட்டும் லாபம் கிடைக்கும். பணம் பறிப்பு மற்றும் நாற்காலிகள் சேதப்படுத்தப்பட்டதால் மிகுந்த பொருளாதார இழப்புக்கு உள்ளாகியுள்ளோம். தொடர்புடையவர்கள் மீது தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து காவல்துறையினர்தெரிவித்தது: வடமாநிலத்தவர்கள் தாக்கப்பட்டு, பணம் பறித்துச் சென்று தொடர்பாக, இதுவரை எவ்வித புகாரும் வரவில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தனர்.