2021 ஆண்டு முடிந்து 2022 புத்தாண்டு பிறந்ததை நள்ளிரவில் மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் மக்கள் நள்ளிரவு வரை காத்திருந்து ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக முழங்கி வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்றனர்.
இதேபோன்று புதுச்சேரியிலும் கடற்கரையில் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றனர்.
தமிழகத்தில் மெரினா, தங்க கடற்கரை, பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வெறிச்சோடிய சாலைகள்
கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் (போர் நினைவுச்சின்னம் முதல் காந்தி சிலை வரை) காமராஜர் சாலை. ஆர்.கே.சாலையில் போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. இதனால் புத்தாண்டையொட்டி முக்கிய சாலைகள் வெறிச்சோடின.
முக்கிய சாலைகள் மற்றும் மேம்பாலங்களில் காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையிலும், கண்காணிப்புப் பணியிலும் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஆலயங்களில் புத்தாண்டு
ஆலயங்களில் பக்தர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை சாந்தோம், பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயத்தில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு புத்தாண்டை வரவேற்றனர். புத்தாண்டையொட்டி தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.
இதேபோன்று ஹிந்து கோயில்களிலும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.