அவிநாசி: துருக்கியில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில், வலு தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த அவிநாசி மாணவனுக்கு சனிக்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவிநாசி காமராஜர் வீதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் வலுதூக்கும் வீரர், பயிற்சியாளர். இவரது மகன் பிரபு(23), கோவை தனியார் கல்லுரியில் பயின்று வருகிறார். வலு தூக்கும் விளையாட்டில் ஆர்வமுள்ள இவர் தனது தந்தையிடம் பயிற்சி பெற்று, தொடர்ந்து 2016, 2017, 2019 இல் பாரதியார் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில், தங்கப் பதக்கம் வென்றார்.
இதேபோல 2019 இல், தேசிய அளவிலான ஜூனியர் சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கப் பதக்கமும், 2019 - 2020 இல் இந்திய பல்கலை கழக அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார். மேலும் 2019, 2020, 2021 இல், மாநில அளவிலான, ஜூனியர் பிரிவு வலு தூக்கும் போட்டியில் தங்கம் வென்றார்.
இதையும் படிக்க | ரூ.75 ஆயிரம் சம்பளத்தில் இந்திய விளையாட்டு ஆணைத்தியில் வேலை: விண்ணப்பிக்க 5ம் தேதி கடைசி
அதே ஆண்டுகளில், மாநில அளவிலான சீனியர் பிரிவு போட்டியிலும் தங்கம் வென்றார். இவர் தற்போது,துருக்கி இஸ்தான்புல் நகரில் அண்மையில் நடைபெற்ற ஆசிய சாம் பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று, வலு தூக்கும் போட்டியில் 74 ஆவது பிரிவில் 737.5 கிலோ எடை தூக்கி 3 தங்கப் பதக்கம், ஒரு வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், அவிநாசிக்கு சனிக்கிழமை வந்திருந்த பிரபுக்கு புதிய பேருந்து நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டு, திறந்த வெளி காரில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். அவிநாசி கொவிட் இணைந்த கைகள், நல்லது நண்பர்கள் அறக்கட்டளை, பொதுநல அமைப்புகள், அனைத்து அரசியல் அமைப்பினர் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல் துறையினர், மருத்துவர்கள் குகப்ரியா, பிரகாஷ், பேரூராட்சி ஆய்வாளர் கருப்பசாமி, நகைக்கடை உரிமையாளர் அபிபூர் ரஹ்மான், கோவை வண்டி மண்டி நிறுவனத்தார் பொறுப்பாளர்கள் ரவி, சிவா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதையும் படிக்க | புத்தாண்டு: நெல்லை கோயில்களில் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம்