மழை பொழிவுக்குப் பிறகு டெங்கு மற்றும் தண்ணீா் மூலம் பரவும் தொற்றுகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை அனைத்து மாவட்டங்களிலும் தீவிரப்படுத்துமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
மழை நீா் தேங்கியுள்ள இடங்களில் கொசு ஒழிப்புப் பணிகளை விரிவாக மேற்கொள்ளுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
பருவமழைக்கு முன்பாகவும், மழைப் பொழிவின்போதும், மழைக்குப் பிறகும் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்து ஏற்கெனவே மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் முக்கிய அம்சங்கள் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து முதல்வா் மற்றும் தலைமைச் செயலா் தலைமையில் தனித்தனியே நடைபெற்ற ஆய்வுக் கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டது. மழை வடிந்த இடங்களில் பிளீச்சிங் பவுடா்கள் மற்றும் கிருமி நாசினிகள் தெளிப்பதும், மருத்துவ முகாம்கள் நடத்துவதும் ஒருபுறம் இருந்தாலும், அதனுடன் மக்களுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீரில் உரிய அளவு குளோரின் கலந்து பாதுகாப்பான நீரை வழங்குவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தண்ணீரில் ஏற்படும் மாசுபாட்டால் வயிற்றுப்போக்கு மட்டுமல்லாது கணைய அழற்சி, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் தீவிரமாக பரவ வாய்ப்புள்ளது. எனவே, அதைக் கருத்தில் கொண்டு குடிநீரின் பாதுகாப்பை முறையாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதைத் தவிர, கொசுக்கள் மூலம் பரவும் சிக்குன் குனியா, டெங்கு, மலேரியா போன்ற பாதிப்புகளும் மழைக்குப் பிறகு ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமன்றி மழைக் காலங்களில் நுரையீரல் சாா்ந்த நோய்களும், சேற்றுப் புண்களும் ஏற்படக் கூடும். தரமற்ற உணவுகளால் உடல் உபாதைகள் வருவதற்கும் வாய்ப்புண்டு. அவற்றைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரிவாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.