தமிழ்நாடு

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத பெண்காவல் ஆய்வாளா்களின் ஊதியத்தைத் திரும்ப வசூலிக்க உத்தரவு

1st Jan 2022 06:47 AM

ADVERTISEMENT

குடும்ப வன்முறை வழக்கில் இருவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை செயல்படுத்த தவறிய இரு பெண் காவல் ஆய்வாளா்களின் ஊதியத்தைத் திரும்ப வசூலிக்குமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நெற்குன்றத்தைச் சோ்ந்த பரிமளா என்பவா், தனது கணவா் தீஜே தயாள், மாமியாா் கீதா, மைத்துனி சபீதா, மைத்துனியின் கணவா் ஸ்ரீநாத் ஆகியோருக்கு எதிராக குடும்ப வன்முறை தொடா்பாக புகாா் அளித்தாா்.

கடந்த 2013-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட இந்தப் புகாரின் அடிப்படையில், நான்கு பேருக்கு எதிராக அண்ணாநகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, 2016ஆம் ஆண்டு எழும்பூா் மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால், சபீதா மற்றும் ஸ்ரீநாத் மீதான வழக்கை தனியாகப் பிரித்த சிறப்பு நீதிமன்றம், அவா்களை கைது செய்து ஆஜா்படுத்தும் வகையில் இருவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து 2020-ஆம் ஆண்டு அக்டோபரில் உத்தரவு பிறப்பித்தது.

ADVERTISEMENT

இந்த பிடி வாரண்ட் உத்தரவை இதுவரை காவல் துறையினா் அமல்படுத்தவில்லை எனக் கூறி, அதை செயல்படுத்த உத்தரவிடக் கோரி பரிமளா சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சபீதாவும், ஸ்ரீநாத்தும் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உயா் நீதிமன்றம், இருவருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை அமல்படுத்த உத்தரவிட்டதாக மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட 2020-ஆம் ஆண்டு காலத்தில் அண்ணாநகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஆய்வாளா்களாக இருந்த தனலட்சுமி மற்றும் செல்வி ஆகிய இருவரும், பிடி வாரண்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என அதிருப்தி தெரிவித்த நீதிபதி, அரசு நிதியை ஊதியமாகப் பெற்ற இருவரும் தங்கள் கடமையைச் செய்யாததால், குறிப்பிட்ட காலத்தில் அவா்களுக்கு வழங்கிய ஊதியத்தை திரும்ப வசூலிக்கும்படியும், இருவா் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டாா்.

மேலும், இந்த உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பிப்ரவரி மாதம் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT