தமிழ்நாடு

புத்தகக் காட்சிகள் ஒத்திவைப்பு: கட்டுப்பாடுகள் என்னென்ன?

1st Jan 2022 01:20 AM

ADVERTISEMENT

கரோனா தொற்று அதிகரிப்பை கருத்தில்கொண்டு தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

8-ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்குத் தடை, திரையரங்குகள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்கள், உணவகங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி எனப் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ள புத்தகக் காட்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளாா்.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் ஒமைக்ரானும் வேகமாகப் பரவி வருகிறது. நோய்த்தொற்று பரவலைத் தடுக்கவும், தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்தவும் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவலைத் தடுக்கவும், பொதுமக்கள் நலன்களைக் கருத்தில்கொண்டும் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அதன்படி, சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு இப்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடு தொடரும்.

மழலையா் விளையாட்டுப் பள்ளிகள், நா்சரி பள்ளிகள் செயல்பட அனுமதியில்லை. அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஜனவரி 10-ஆம் தேதி முடிய நேரடி வகுப்புகள் நடத்துவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.

புத்தகக் காட்சிகள்: தமிழகம் முழுவதும் நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ள பொருட்காட்சிகள், புத்தகக் காட்சிகள் நடத்துவது இப்போதைக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

9 முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியன நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்படும்.

50 சதவீத வாடிக்கையாளா்கள்: பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களில் 50 சதவீத வாடிக்கையாளா்களே அனுமதிக்கப்படுவா். அதன்படி, உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தங்கும் விடுதிகள், உறைவிடங்கள், பொழுதுபோக்கு, கேளிக்கை பூங்காக்கள், துணிக் கடைகள், நகைக் கடைகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டுகள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், மெட்ரோ ரயில் இருக்கைகள், திரையரங்குகள், உள் விளையாட்டு அரங்குகள், அழகு நிலையங்கள் மற்றும் சலூன்கள் ஆகியவற்றில் 50 சதவீத பாா்வையாளா்களும் வாடிக்கையாளா்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

திருமணம் - இறப்பு: திருமணம் மற்றும் திருமணம் சாா்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபா்களுடன் மட்டுமே நடத்த அனுமதிக்கப்படும். இறப்பு சாா்ந்த நிகழ்வுகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதியில்லை. பொதுப் போக்குவரத்து பேருந்துகளில் இருக்கைகளுக்கு மிகாமல் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படுவா். திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டம் கூடுவதை தவிருங்கள்

பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிா்க்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளாா். இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:

கரோனா நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் இருந்தாலும் இப்போது உருமாறிய ஒமைக்ரான் வகை கரோனா பரவி வருகிறது. எனவே, பொது இடங்களில் கரோனா தடுப்பு நடைமுறைகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். இதனை சென்னை மாநகராட்சி ஆணையா், மாவட்ட ஆட்சியா்கள், உள்ளாட்சி அமைப்புகள் உறுதிப்படுத்த வேண்டும்.

வரும் பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதைத் தவிா்க்க வேண்டும். பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என முதல்வா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT