தமிழ்நாடு

மயிலாடுதுறை நகர்மன்றத்தைக் கைப்பற்றப்போவது யார்?

23rd Feb 2022 04:22 PM | ஜி. கிருஷ்ணகுமார்

ADVERTISEMENT

மயிலாடுதுறை: திமுகவில் மயிலாடுதுறை நகர்மன்றத்தைக் கைப்பற்றப்போவது யார் என்று அக்கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களிடமும் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மயிலாடுதுறை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இதில் 19-வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் உயிரிழந்ததால் அந்த வார்டுக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, மீதமுள்ள 35 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், 24 வார்டுகளில் திமுக தனித்து வெற்றி பெற்றுள்ளதால் மயிலாடுதுறை நகர்மன்றத்தை திமுக கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. அதேநேரத்தில், நகர்மன்றத்தைக் கைப்பற்றுவதில் திமுகவினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்தப் பதவிக்கு 3 பேர் தீவிர முயற்சி செய்து வருவதால் அக்கட்சியினரிடையே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மயிலாடுதுறை நகராட்சியில் 2006-2011-ஆம் ஆண்டுகளில் நகர்மன்றத் தலைவராக இருந்தவர் லிங்கராஜன். இவர் தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 9-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தற்போது திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினராக உள்ள இவர், கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இவர், தற்போதைய தமிழக அமைச்சர் ஒருவரின் உறவினர் ஆவார். ஏற்கெனவே நகர்மன்றத் தலைவராக இருந்த அனுபவத்தில், நடைபெறவுள்ள மறைமுகத் தேர்தலில் நகர்மன்றத் தலைவராகும் முனைப்புடன் களம் இறங்கியுள்ளார்.

லிங்கராஜன் |  செல்வராஜ் |  ரஜினி

மயிலாடுதுறை நகராட்சியில் 2011-2016 ஆம் ஆண்டுகளில் நகர்மன்ற துணைத் தலைவராக பொறுப்பு வகித்த குண்டாமணி என்கிற என்.செல்வராஜ், 21-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் 15 ஆண்டுகளாக திமுக மயிலாடுதுறை நகரச் செயலாளராக உள்ளார். 3 முறை மாவட்டப் பிரதிநிதியாக இருந்த இவர், கட்சியில் ஆற்றியுள்ள தீவிர களப்பணியின் காரணமாக நகர்மன்றத் தலைவர் பதவிக்கு தலைமையால் பரிந்துரைக்கப்படுவோம் என்ற முழு நம்பிக்கையுடன் களம் இறங்கியுள்ளார்.

ADVERTISEMENT

இதேபோல், மயிலாடுதுறை நகராட்சி 29-வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மா.ரஜினி வெற்றி பெற்றுள்ளார். இந்த வார்டில் கட்சியில் சீட் கிடைக்காத திமுகவினர் 3 பேர் மற்றும் தனித்து களமாடிய திமுகவின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆகியோர் கணிசமான வாக்குகளைப் பிரித்த போதிலும், அந்த வார்டில் செல்வாக்குடைய அதிமுக வேட்பாளரை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் அமைச்சரின் உறவினரான இவர், எம்.பி.ஏ பட்டதாரியான தனக்கு கட்சித் தலைமை நிச்சயம் வாய்ப்பளிக்கும் என்ற எதிர்ப்பார்ப்புடன் உள்ளார்.

இவர்கள் மூவர் தவிர மேலும் ஓரிருவர் நகர்மன்றத் தலைவராகும் கனவுடன் இருந்தாலும், இந்த 3 பேருக்கு மட்டுமே அதிக வாய்ப்புள்ளதால், நகர்மன்றத் தலைவர் மகுடத்தை அலங்கரிக்கப் போவது யார் என்று அக்கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT