தமிழ்நாடு

கோட்டை மாவட்டத்தில் செல்வாக்கை இழந்ததா அதிமுக?

23rd Feb 2022 03:05 PM | என்.​ தமிழ்ச்செல்வன்

ADVERTISEMENT

வேலூர்: மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் முதல் உள்ளாட்சி நிர்வாகம் வரை வேலூர் மாவட்டத்தை ஒட்டுமொத்தமாக திமுக கைப்பற்றியுள்ளது. இது வேலூர் கோட்டை மாவட்டத்தில் அதிமுகவின் செல்வாக்கு கரைந்துவிட்டதை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேலூர் மாவட்டத்திலுள்ள மாநகராட்சியின் 60 வார்டுகளில் 44 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 2008-இல் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்டதற்கு பிறகு முதன்முறையாக மேயர், துணை மேயர், மண்டலக்குழுத் தலைவர் என அனைத்துப் பொறுப்புகளையும் திமுகவே கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 36 வார்டுகளைக் கொண்ட குடியாத்தம் நகராட்சியில் திமுக மட்டும் 21 வார்டுகளிலும், 21 வார்டுகளை உள்ளடக்கிய பேர்ணாம்பட்டு நகராட்சியில் திமுக மட்டும் 14 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகளான ஒடுகத்தூரில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 13 வார்டுகளிலும், பள்ளிகொண்டாவில் உள்ள 18 வார்டுகளில் திமுக 14 வார்டுகளிலும், பென்னாத்தூரில் உள்ள 15 வார்டுகளில் திமுக 8 வார்டுகளிலும், திருவலத்தில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 9 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் மாவட்டத்திலுள்ள இரு நகராட்சிகள், 4 பேரூராட்சிகளின் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் திமுகவே கைப்பற்ற உள்ளது.

ஏற்கனவே, 2019-இல் நடந்த மக்களவைத் தேர்தல் மூலம் அதிமுக வசம் இருந்த வேலூர் மக்களவைத் தொகுதியையும் திமுக கைப்பற்றியது. அதன்பிறகு 2021-இல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் இம்மாவட்டத்திலுள்ள கே.வி.குப்பத்தைத் தவிர வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய 4 தொகுதிகளையும் திமுக தக்க வைத்துக் கொண்டது. இதன்தொடர்ச்சியாக அக்டோபர் மாதம் நடைபெற்ற விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் மூலம் வேலூர் மாவட்டத்தில் 14 வார்டுகளைக் கொண்ட மாவட்ட ஊராட்சிக்குழுவை ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணியே கைப்பற்றியது.

ADVERTISEMENT

மேலும், மாவட்டத்திலுள்ள வேலூர், கணியம்பாடி, காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், பேர்ணாம்பட்டு ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தமுள்ள 138 வார்டுகளில் திமுக 102 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 7 ஒன்றியங்களின் பெருந்தலைவர், துணைத் தலைவர் பதவிகளையும் திமுகவே கைப்பற்றியது. இதன்மூலம், வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையை அடையாளமாகக் கொண்டு விளங்கும் வேலூர் மாவட்டம் திமுகவின் கோட்டையாக மாற்றப்பட்டிருப்பது உறுதியாகியிருப்பது மட்டுமின்றி இம்மாவட்டத்தில் அதிமுகவின் செல்வாக்கு மிகவும் பின்தங்கியிருப்பதை காட்டுவதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

வேலூர் சட்டப்பேரவைத் தொகுதி என்பதே வேலூர் மாநகராட்சியின் பிரதான வார்டுகளை உள்ளடக்கியதுதான். தவிர, வேலூர் தொகுதியை அடுத்துள்ள காட்பாடி, அணைக்கட்டு தொகுதிகளிலும் வேலூர் மாநகராட்சியின் பெரும்பகுதி வார்டுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 2011 பேரவைத் தேர்தலின்போது வேலூர் சட்டப்பேரவை தொகுதி மட்டுமே அதிமுக 75,118 வாக்குகள் பெற்றிருந்தது. அத்துடன், காட்பாடி, அணைக்கட்டு தொகுதிக்கு உள்பட்ட வேலூர் மாநகராட்சி வார்டு பகுதிகளில் அதிமுகவுக்கு கிடைத்த வாக்குகளையும் சேர்க்கும்போது சுமார் 1.50 லட்சம் வாக்குகள் அளவுக்கு பெற்றிருந்தது.

ஆனால், தற்போது நடந்து முடிந்த வேலூர் மாநகராட்சி 58 வார்டுகளில் பதிவான 2,61,340 வாக்குகளில் அதிமுகவுக்கு 62,339 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. குறிப்பாக சில வார்டுகளில் இரட்டை, மூன்று இலக்க வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.

இதேநிலைதான் மாவட்டத்திலுள்ள மற்ற நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், வேலூர் மாவட்டத்தில் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுக்கான காரணங்களை அறிந்து கட்சியினர் அவற்றை சீர்செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்காவிடில் அதன் விளைவுகளை 2024 மக்களவைத் தேர்தலிலும் எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT