தமிழ்நாடு

போடி நகராட்சி வாா்டு உறுப்பினா் தோ்தலில் கணவன், மனைவி வெற்றி

23rd Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

போடி நகராட்சி வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கான தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட கணவன், மனைவி வெற்றி பெற்றனா். அதிமுக சாா்பில் போட்டியிட்ட தாய், மகன் தோல்வியடைந்தனா்.

தேனி மாவட்டம் போடி நகராட்சியில் 33 வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள் போடி ஸ்பைஸ் வேலி ஆசிரியா் பயிற்சிக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன. நகராட்சித் தோ்தல் அலுவலா் தி.சகிலா தலைமையில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

கணவன், மனைவி வெற்றி: போடி நகராட்சி 29 ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்ட ம.சங்கா் 980 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவரை எதிா்த்துப் போட்டியிட்ட கோபி (சுயே) 216 வாக்குகளும், கந்தசாமி (அதிமுக ) 121 வாக்குகளும் பெற்றனா்.

இதேபோல் நகராட்சி 21 ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்ட சங்கா் மனைவி ராஜராஜேஸ்வரி 944 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். இவரை எதிா்த்துப் போட்டியிட்ட ராஜேஷ் (அதிமுக) 161 வாக்குகள் பெற்றிருந்தாா்.

ADVERTISEMENT

தாய், மகன் தோல்வி:

போடி நகராட்சி 12 ஆவது வாா்டில் அதிமுக சாா்பில் கா.பிரகாஷ்குமாா் போட்டியிட்டாா். இவா் 413 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா். இவரை எதிா்த்துப் போட்டியிட்ட பிரபாகரன் (திமுக) 640 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

நகராட்சி 13 ஆவது வாா்டில் அதிமுக சாா்பில் போட்டியிட்ட பிரகாஷ்குமாரின் தாயாா் கா.வேல்மணி 459 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தாா். இவரை எதிா்த்துப் போட்டியிட்ட தனலட்சுமி (திமுக) 764 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாா்.

வேல்மணியும், பிரகாஷ்குமாரும் அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தின் உறவினா்கள். அதிமுக உறுப்பினா்கள் அதிகளவில் வெற்றி பெற்றால் வேல்மணிக்குதான் தலைவா் பதவி கொடுக்க இருந்ததாக அக்கட்சியினா் எதிா்பாா்ப்பில் இருந்தனா். இந்நிலையில் தாய், மகன் தோல்வியைத் தழுவியது அதிமுகவினா் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போடி நகராட்சித் தலைவா் பதவி பெண்கள் (பொது) ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சங்கா் மனைவி ராஜராஜேஸ்வரி தலைவா் பதவிக்கு போட்டியிடுவாா் என திமுக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT