தமிழ்நாடு

ஈரோட்டில் 4 நகராட்சிகளையும் கைப்பற்றியது திமுக கூட்டணி

22nd Feb 2022 02:36 PM

ADVERTISEMENT

 

ஈரோடு மாவட்டத்தில் கோபி, சத்தியமங்கலம், பவானி உள்ளிட்ட நான்கு நகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பவானி, கோபி, சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி ஆகிய நான்கு நகராட்சிகளில் தேர்தல் நடந்தது. இதில், கோபி தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக மூன்று முறை அதிமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், நான்காவது முறையும் இந்த வெற்றி தொடருமா என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. 

திமுக முன்னணி நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனின் சொந்த தொகுதி என்பதால், இங்கு திமுக - அதிமுக இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால், தேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 30 வார்டுகளில், திமுக 14 வார்டுகளிலும், அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றதன் மூலம், கோபி நகராட்சி திமுக வசமாகியுள்ளது. அதிமுக 13 வார்டுகளிலும், சுயேட்சை ஒரு வார்டிலும் இங்கு வெற்றி பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT

இதேபோல், புன்செய் புளியம்பட்டி நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில், 11 வார்டுகளில் திமுகவும், 2 வார்டுகளில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. நான்கு இடங்களை சுயேட்சைகள் கைப்பற்றியுள்ள நிலையில், அதிமுக ஒரு வார்டினை மட்டும் கைப்பற்றியுள்ளது. இங்கு 4 வார்டுகளில் அதிமுக வைப்புத்தொகையை இழந்துள்ளது.

சத்தியமங்கலம் நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில், 18 வார்டுகளில் திமுகவும், 4 வார்டுகளில் அதிமுகவும், பாஜக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் தலா இரு வார்டுகளிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். 

பவானி நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில், திமுக 19 வார்டுகளிலும், அதிமுக 5 வார்டுகளிலும், கம்யூனிஸ்ட் 2 வார்டுகளிலும், சுயேட்சை ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.  இதன்மூலம் ஈரோட்டில் தேர்தல் நடந்த நான்கு நகராட்சிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT