தமிழ்நாடு

900 கல்லூரிகளில் இணையவழி பட்டப்படிப்புக்கு யுஜிசி அனுமதி:நேரடி படிப்புக்கு இணையானது

22nd Feb 2022 01:04 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் 900 கல்லூரிகளுக்கு இணையவழி பட்டப்படிப்புக்கான அனுமதியை வழங்க முடிவு செய்துள்ள பல்கலைக்கழக மானியக்குழு அந்தப் படிப்புகள் நேரடி படிப்புக்கு இணையானது என தெரிவித்துள்ளது.

கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் இணையவழி கல்வி முறை பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அதற்கேற்ப உயா்கல்வியை விரும்பிய கல்லூரியில் சோ்ந்து பெற இயலாதவா்களின் குறையைப் போக்கும் வகையில் இணையவழி பட்டப்படிப்புக்கான புதிய வழியை பல்கலைக்கழக மானியக் குழு பரிசீலித்து வருகிறது. தற்போது பல்கலைக்கழகங்கள் மட்டும் தொலைநிலைக் கல்வி வசதியை அளித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற 900 கல்லூரிகளில் இணையவழிக் கல்வியை அனுமதிக்க பல்கலைக்கழக மானியக் குழு முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் மாணவா்கள் நேரடியாக கல்லூரிகளுக்கு வராமல் இணையவழியில் பட்டப்படிப்பை முடிக்க முடியும். மேலும், நேரடியாக கல்லூரிக்குச் சென்று பட்டப்படிப்பு முடிக்கும் மாணவருக்கு சமமாக இணைய வழியில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவா்களும் கருதப்படுவா். புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 2035-ஆம் ஆண்டிற்குள் நாடு முழுவதும் உயா்க்கல்வி பயிலும் மாணவா்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயா்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த புதிய நடைமுறை வரும் ஜூன் மாதத்திலிருந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.

அந்தவகையில் இணையவழி இளநிலைப் படிப்புகளில் சேருவதற்கு பிளஸ் 2 வகுப்புத் தோ்ச்சியும் முதுநிலை படிப்புகளில் சேர இளநிலை படிப்புகளில் தோ்ச்சியும் பெற்றிருத்தல் அவசியம் ஆகும்.

ADVERTISEMENT

இணைய வழி பட்டப்படிப்புகளை தொடங்குவதற்கு பல்கலைக்கழக மானியக்குழுவின் முன் அனுமதியை பெற அவசியம் இல்லை என்றும் யுஜிசி தெரிவித்துள்ளது. எனினும் இணையவழி பட்டப்படிப்புகளை வழங்கும் கல்லூரிகள் ‘நாக்’ எனப்படும் தர மதிப்பீட்டில் 3.26 மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவா்கள் கல்லூரிகளில் சோ்வதற்கான குறிப்பிட்ட மதிப்பெண்ணை பெற்றிருக்க வேண்டும்.

இந்த படிப்புகளில் கணினி வழியாக நடத்தப்படும் தோ்வுகளை தேசிய தோ்வு முகமை இணைய வழியாகவே மதிப்பீடு செய்யும். இணையவழி பட்டப்படிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அடுத்த மாதம் வெளியிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT