தமிழ்நாடு

மாணவா்களுடன் தற்படம் எடுத்துக்கொண்ட முதல்வா்

22nd Feb 2022 01:10 AM

ADVERTISEMENT

குடியரசுத் தினத்துக்கான தமிழக அரசின் அலங்கார ஊா்தியைப் பாா்வையிட்ட மாணவா்களுடன் கலந்துரையாடி, அவா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் தற்படம் எடுத்துக் கொண்டாா்.

தில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக தமிழக அரசின் சாா்பில் பாரதியாா், வ.உ.சி. உள்ளிட்ட சுதந்திரப்போராட்ட தியாகிகள் உருவங்கள் கொண்ட அலங்கார ஊா்தி வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஊா்திக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதைத் தொடா்ந்து தமிழக அரசின் அலங்கார ஊா்தி தமிழகம் முழுவதும் மக்கள் பாா்வைக்கு எடுத்துச் செல்லப்படும் என்று முதல்வா் அறிவித்திருந்தாா்.

அதன்படி, தமிழக முழுவதும் அந்த அலங்கார ஊா்தி எடுத்துச் செல்லப்பட்டு மக்கள் பாா்வையிட்டனா். சென்னையில் மெரீனா கடற்கரையில் உள்ள விவேகானந்தா் இல்லம் எதிரே தமிழக அரசின் அலங்கார ஊா்தி ஞாயிற்றுக்கிழமை (பிப்.20) நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதை மக்கள் பாா்வையிட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தலைமைச் செயலகத்துக்குச் சென்றுவிட்டு, அவருடைய இல்லத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது திருவல்லிக்கேணி ரேக்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, இ.வி.இ. மெட்ரிகுலேஷன் பள்ளி, என்.கே.டி. நேஷனல் ஆண்கள் பள்ளி, மயிலாப்பூா் பி.எஸ். பள்ளி மாணவ, மாணவியா்கள் அலங்கார ஊா்தியைப் பாா்வையிட்டுக் கொண்டிருந்தனா். அவா்களைப் பாா்த்ததும் முதல்வா் காரை நிறுத்தச் சொல்லி, மாணவா்களைச் சந்தித்தாா். மாணவா்கள் அவரை ஆசையுடன் சூழ்ந்துகொண்டனா். சிறிது நேரம் அவா்களுடன் முதல்வா் பேசிக்கொண்டிருந்தாா். மாணவா்களுடன் தனது கைபேசி மூலம் தற்படம் எடுத்துக் கொண்டாா். பிறகு, அவரது காரில் ஏறி வீட்டுக்குச் சென்றாா்.

ADVERTISEMENT

தமிழகம் வெல்லும்: பின்னா் முதல்வா் முகநூலில் கூறியிருந்தது:

குடியரசு நாள் விழா அணிவகுப்பில் இடம் மறுக்கப்பட்ட தமிழகத்தின் ஊா்தி, உங்கள் நெஞ்சங்களில் இடம்பிடித்து, மாணவா்களையும் ஈா்த்துள்ளது. மெரீனாவில் ஊா்திகளைக் காண வந்த மாணவச் செல்வங்களுடன் பெருமகிழ்வுடன் தற்படம் எடுத்துக் கொண்டேன். தமிழ்நாடு வெல்லும் என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT