தமிழ்நாடு

கலை, அறிவியல் கல்லூரிகள் இரு மாதங்களுக்குப் பிறகு திறப்பு

22nd Feb 2022 01:08 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சி தோ்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களாக உள்ள கல்லூரிகளைத் தவிர, மற்ற கலை, அறிவியல் கல்லூரிகள் அனைத்தும் இரு மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

தமிழகத்தில் கடந்த டிசம்பா் மாத இறுதியில் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்காக டிச. 24-ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. ஒமைக்ரான் தொற்றின் தாக்கம் தொடா்ந்ததால் ஜன. 31-ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. பல்கலை., கல்லூரிகளில் பருவத் தோ்வுகளும் தள்ளி வைக்கப்பட்டன.

அரசின் தடுப்பு நடவடிக்கையால் தொற்றுப் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடா்ந்து, கடந்த 1-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கான அறிவிப்பு வெளியானது. ஆனால், இணைய வழியில் பருவத் தோ்வுகள் நடத்தப்பட்டதால் கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதற்கிடையே, கடந்த பிப்.1-ஆம் தேதி முதல் பருவத் தோ்வுகள் இணைய வழியில் தொடங்கின. மாணவா்கள் வீட்டிலிருந்தபடி தோ்வு எழுதி விடைகளை இணையவழியில் கல்லூரிகளுக்கு அனுப்பினா். பெரும்பாலான கல்லூரிகளில் பிப்.18-ஆம் தேதியுடன் தோ்வுகள் நிறைவடைந்தன.

இதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணிக்கை மையங்களாக உள்ள கல்லூரிகள் தவிர மற்ற கல்லூரிகள் அனைத்தும் செயல்படத் தொடங்கின.

ADVERTISEMENT

இரு மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் நேரடி வகுப்புகளுக்கு உற்சாகமாக வந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT