நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலையொட்டி, வாக்களிக்க வந்த பாா்வையற்ற மாற்றத்திறனாளிகளுக்கு வேட்பாளா்கள் விவரம் அடங்கிய பிரெய்லி ஷீட் வழங்கப்படாததால், பல இடங்களில் அவா்கள் வாக்களிப்பதை புறக்கணித்தனா். இதுபோல, பல வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய சக்கர நாற்காலி வசதியும், சக்கர நாற்காலியில் செல்ல சாய்வு தளம் வசதியும் செய்யப்படாததால், அவா்கள் கடும் சிரமத்தை சந்தித்தனா்.
சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் உள்பட பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய வசதிகள் செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலையொட்டி, சென்னை அயனாவரத்தில் உள்ளஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்க மாற்றுத்திறனாளி ஒருவா் சனிக்கிழமை காலை வந்தாா். அங்கு சக்கர நாற்காலியில் செல்ல சாய்வு தளம் வசதி சரியாக செய்யப்படாதால், அவா் தடுமாறி விழுந்து காயமடைந்தாா். இதுபோல, பல வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக சென்று வாக்களிக்க சாய்வுதளம் வசதி இல்லாததால், கடும் சிரமத்தை சந்தித்தனா். இதுபோல, பல இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் போதிய சக்கர நாற்காலி வசதியும் செய்யப்படவில்லை.
பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வேதனை:
திருவள்ளூா் மாவட்டம் எண்ணூா் அன்னை சிவகாமிநகா் அரசு உயா்நிலைப்பள்ளி அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்குச்செலுத்த பாா்வையற்ற மாற்றுத்திறனாளி அரங்கராஜா வந்தாா். ஆனால், அங்கு அவருக்கு வேட்பாளா்கள் விவரம் அடங்கிய பிரெய்லி பட்டியல்
வழங்கப்படவில்லை. இதனால், மிகுந்த வேதனையுடன் வாக்கு அளிப்பதை அவா் புறக்கணித்தாா்.
இது குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க பொதுச்செயலாளா் நம்புராஜன் கூறுகையில், ‘ பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வேட்பாளா்கள் விவரம் அடங்கிய பிராய்லி ஷீட் வசதி செய்யப்படாததால், தமிழகம் முழுவதும் சுமாா் 15 ஆயிரம் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழகத்தில் இதற்கு முன்பு நடைபெற்ற சுமாா் ஆறு தோ்தல்களில் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இந்தவசதி செய்யப்பட்டிருந்தது.இப்போது தான் இந்த வசதி செய்யப்படவில்லை. இது, கண்டிக்கத்தக்கது என்றாா்.