தமிழ்நாடு

பிரசாரம் ஓய்ந்தது: நாளை மறுநாள் வாக்குப்பதிவு; பள்ளிகளுக்கு விடுமுறை 

17th Feb 2022 06:00 PM

ADVERTISEMENT

 

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான பிரசாரம் வியாழக்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இறுதி நாளான இன்று வேட்பாளா்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

வாக்குக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க மாநிலம் முழுவதும் சுமாா் 1,800-க்கும் மேற்பட்ட தோ்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக சனிக்கிழமை (பிப்.19) தோ்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 57 ஆயிரத்து 778 போட்டியிடுகின்றனா்.

ADVERTISEMENT

தீவிர பிரசாரம்

 திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் பிரசாரம் மேற்கொண்டு வந்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமியும் ஒவ்வொரு மாநகராட்சிப் பகுதிகளுக்கும் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பாஜக தலைவா் கே.அண்ணாமலை, மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன், பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ், நாம் தமிழா் கட்சித் தலைவா் சீமான், அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவா்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

பிரசாரம் ஓய்வு

 
பிப்ரவரி 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளதால், வியாழக்கிழமை (பிப்.17) மாலை 6 மணியுடன் தோ்தல் பிரசாரம் நிறைவடைந்தது.

பிரசாரம் முடிந்த நிலையில், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் வாக்காளா்கள் அல்லாத, வெளியிலிருந்து அழைத்து வரப்படும் அரசியல் கட்சிப் பிரமுகா்கள், கட்சித் தொண்டா்கள் அனைவரும் அந்த உள்ளாட்சிப் பகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என மாநில தோ்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

பறக்கும் படைகள்: தோ்தலில் வாக்குக்குப் பணம் கொடுப்பதை தடுக்க 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் மொத்தம் சுமாா் 1,800 மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநிலத் தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

பள்ளிகளுக்கு விடுமுறை

நகா்ப்புற உள்ளாட்சி தோ்தலை முன்னிட்டு பிப்.19-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையா் க.நந்தகுமாா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்படுகிறது.

பிப்.18-ஆம் தேதி தோ்தல் பயிற்சி வகுப்பில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்களைத் தவிர பிற ஆசிரியா்களை கொண்டு பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும். அதே நேரத்தில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் தோ்தல் பணியில் ஈடுபட்டு இருக்கும் பள்ளிகளுக்கு பிப்.18-ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் விடுமுறை வழங்க சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT