தமிழ்நாடு

சுகம் தரும் சித்த மருத்துவம்: தூக்கமின்மைக்கு ‘இந்தியன் ஜின்செங்’ தீர்வு தருமா?

11th Feb 2022 12:00 PM | மரு.சோ.தில்லைவாணன், அரசு சித்த மருத்துவர்

ADVERTISEMENT


தூக்கம் என்பது உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும் அத்தியாவசியமான ஒன்று. அதிலும் பகல் தூக்கத்தால் வாத நோய்கள் வரக்கூடும் என்று சித்த மருத்துவத்தில் பதார்த்த குண சிந்தாமணி நூல் எச்சரிக்கை விடுக்கின்றது. 

இரவு தூக்கம் மட்டுமே ஏற்புடையது. அந்த இரவு தூக்கம் என்பது அடுத்த நாளுக்கான இன்றியமையாத ஓய்வு. காலை முதல் மாலை வரை செய்யும் உழைப்பிற்கு ஏற்றார்போல், உடல் உறுப்புகளுக்கு ஓய்வு அவசியம். நல்ல தூக்கம் நல்ல புத்துணர்ச்சி தந்து மகிழ்வான வாழ்வையும், மன நிம்மதியையும் தரும் என்பதில் மாற்று கருத்தில்லை.

இரவில் சீக்கிரமே படுக்கைக்கு சென்று அதிகாலையில் எழுந்து சூரிய உதயத்தை பார்த்து புத்துணர்ச்சி மட்டுமல்லாது ஆரோக்கியத்தையும் பெற்ற காலம் சென்ற தலைமுறையுடன் முடிவடைந்தது. 

இரவு முழுக்க அலைபேசி செயலிகளுடன் காலம் கழித்து சூரியன் உதிக்கும் வேளையில் உறங்க தொடங்கி ஆரோக்கியத்தை தொலைத்து நிற்கும் இன்றைய தலைமுறையினருக்கு ஹார்மோன் கோளாறுகளும், உடல் பருமனும், மன அழுத்தமும் இன்னும் பல உடல் உபாதைகளும் வந்தடையும் என்பது தெரிய வாய்ப்பில்லை.

ADVERTISEMENT

வயதுக்கு தகுந்தாற்போல் தூக்கம் அவசியம். கைக்குழந்தைகளுக்கு 12-15 மணி நேரமும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு குறைந்தது 10 மணி நேரமும், பெரியவர்களுக்கு குறைந்தது 7-8 மணி நேரமும் தூக்கம் அவசியம். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் பகல் நேரங்களில் சிறிது ஓய்வெடுத்துக் கொள்ளலாம். 

‘டாக்டர் தூங்கியே பல நாள்களாகின்றது, தூக்க மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடவும் தயக்கமாக உள்ளது. சரியான தூக்கம் இல்லாததால் மன அழுத்தமாக உள்ளது’ என்று தூக்கமின்மை தொந்தரவால் வாழ்க்கையே வெறுத்துப் போனவர்களுக்கு தான் தெரியும் தூக்கத்தின் அருமை. 

சித்த மருத்துவத்தில் இதற்க்கு தீர்வு உள்ளதா?, அது பாதுகாப்பானதாக இருக்குமா? என்று சித்த மருத்துவரிடம் கைகுலுக்கி கேள்வி கேட்க நினைக்கும் அனைவருக்கும் சித்த மருத்துவ மூலிகை ‘இந்தியன் ஜின்செங்’ என்று அழைக்கப்படும் ‘அமுக்கரா கிழங்கு’ பயன் தரும்.

அமுக்கரா கிழங்கு என்பது அமுக்கரா என்ற மூலிகையின் வேர்பகுதியை குறிக்கும். இதுவே அதிக மருத்துவ குணம் வாய்ந்தது. அமுக்கரா என்ற பெயர் வரக்காரணத்தை ஆராய்ந்தால் வாதத்தால் உடலில் அமுக்குவதை போன்ற நோய் நிலைகளை (disease due to compression of various origin) நீக்குவதால் இப்பெயர் வந்ததாக தெரிகிறது. 

‘வாதமலாது மேனி கெடாது’ என்று அடிக்கடி நான் கூறும் தேரையர் சித்தரின் பிணிகளுக்கான முதல் காரணம். பல்வேறு நோய்களை உண்டாக்கும் வாதத்தை அமுக்கரா நீக்கும். 

இதற்கு அசுவகந்தம் என்ற வேறு பெயரும் உண்டு. அசுவம் + கந்தம் என்று பிரித்து பார்த்தால் அமுக்காராவின் கிழங்கு குதிரையின் வாசத்தை ஏற்படுத்தும். அதாவது ஆண்களுக்கு குதிரை போன்ற பலத்தை தரும் என்ற பொருள் படும்படியாக உள்ளது. 

தமிழகத்தில் நிலவேம்பு குடிநீருக்கு அடுத்தாற்போல மிகப் பிரசித்தி பெற்ற ஒன்று, இந்த அமுக்கரா. உலக அளவில் அதிகப்படியான ஆராய்ச்சிகள் இந்த அமுக்கரா கிழங்கிற்கு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

அமுக்கரா கிழங்கு கிட்டத்தட்ட ஆறாயிரம் ஆண்டுகளாக உலக நாடுகளில் பல்வேறு பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருவதாக வரலாறு கூறுகின்றது. 

ஆசியா கண்டம் முழுவதிலும் அதிகம் பயன்படுத்தப்படும் மற்றொரு மூலிகை ஜின்செங். அமுக்கராவில் உள்ள ‘வித்தனோசைடு’ என்ற மூலக்கூறு  ஜின்செங்-கில் உள்ள முக்கிய செயல்படும் மூலக்கூறான ‘ஜின்செனோசைடு’  போன்று மருத்துவ குணம் அளிப்பதால் அமுக்கரா ‘இந்தியன் ஜின்செங்’ என்ற பெயர் பெற்றது. 

அமுக்கரா கிழங்கில் உள்ள ஐசோபெல்லெட்டின், அனாஃபெரின், அனாஹைக்ரின் போன்ற அல்கலாய்டுகளும், வித்தனோலைடுகள், விதாஃபெரின் போன்ற ஸ்டீராய்டால் லாக்டோன்களும், சப்போனின்களும் அதன் மருத்துவ செய்கைக்கு காரணமாக உள்ளன. இதில் வித்தாபெரின்-ஏ மற்றும் பி மிக முக்கிய பங்காற்றுகின்றன. அதிலும் வித்தாபெரின்-ஏ என்ற செயலி மூலக்கூறு அமுக்கராவின் மருத்துவ குணங்களுக்கு பெரும்பங்காற்றுகிறது. இதுவே, மன அழுத்தத்தை போக்கி தூக்கம் வரவழைத்து புத்துணர்ச்சி தருவதாக உள்ளது.

அமுக்கரா கிழங்கில் உள்ள வேதிப்பொருட்கள் வீக்கமுருக்கியாகவும், இயற்கை வலி நிவாரணியாகவும், மன அமைதிப்படுத்தியாகவும், ஆண்-பெண் இருபாலருக்கும் காமப்பெருக்கியாகவும், ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், நுண்ணுயிர்க்கொல்லியாகவும், உடலில் கட்டிகளை கரைக்கவும், இருதயம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதுகாக்கவும், மன அழுத்தத்தை தடுக்க கூடியதாகவும், ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையுடையதால் புற்று நோயை தடுப்பது போன்ற பல்வேறு மருத்துவ குணங்களையும்  உடையது.

ஆகவே,சித்த மருந்தான அமுக்கரா சூரணத்தை தினசரி பாலில் கலந்து எடுத்துக்கொள்ள இயல்பான தூக்கம் வருவதோடு மேற்சொன்ன மருத்துவ பலன்களும் கிட்டும். 

அஸ்வகந்தா தைலத்தை வாரம் இருமுறை தலைக்கு தேய்த்து குளித்தாலும் மன அழுத்தம் நீங்கி புத்துணர்வு தரும். குழந்தைகள் முதல் முதியோர் வரை மட்டுமின்றி, கர்ப்பிணி பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் கூட அமுக்கராவை தேவைப்படின் எடுத்துக்கொள்ள சிறந்த நன்மை தரும். ஊட்டச்சத்து குறைவால் உடல் எடை குறைவாக உள்ள சிறுவர்களுக்கும் இதனை தருவதால் எடை கூடும்.

ஆரோக்கியமாக நெடுநாள் வாழ ஆசைப்படும் பலரும் ‘சர்வ ரோக நிவாரணி’ என்று கருதப்படும் அமுக்கராவை பயன்படுத்த தொடங்கினால் நல்ல பலன் தரும். 

பல்வேறு நோய்களின் காரணமாக, தூக்கமின்மையால் அவதியுறும் பலருக்கும் பாதுகாப்பானது அமுக்கரா.

நல்ல தூக்கம் இல்லாமல் வருந்தும் பலரும், அமுக்கரா எடுத்துக்கொள்ள தொடங்கினால், தூக்கமின்மை நீங்குவதோடு உடல் மற்றும் மனம் புத்துணர்ச்சி அடைவதோடு மகிழ்ச்சியும் கிட்டும் என்பதில் ஐயமில்லை.

மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் ஐடி - drthillai.mdsiddha@gmail.com தொலைபேசி எண். 91 8056040768

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT