தமிழ்நாடு

'தமிழக உளவுத் துறை என் தொலைபேசியை ஒட்டுக்கேட்கிறது' - அண்ணாமலை குற்றச்சாட்டு

10th Feb 2022 04:07 PM

ADVERTISEMENT

தமிழக உளவுத்துறை தன்னுடைய தொலைபேசியை ஒட்டுக்கேட்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: 

பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் உண்மைத் தன்மையை கண்டறியப்பட வேண்டும். அதற்கு இந்த சம்பவம் குறித்து 'தேசிய புலனாய்வு முகமை' விசாரிக்க வேண்டும். தடயங்கள் ஆய்வு  செய்வதற்கு முன்னதாகவே, சம்பவம் நடந்த இடத்தை காவல்துறை வந்து சுத்தம் செய்தது ஏன்? என்று தெரியவில்லை. யாராக இருந்தாலும் கைது செய்து சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும். 

இந்த சம்பவம் எங்கள் உறுதியை குலைக்காது. யாரை வைத்து வேட்பாளர்களை மிரட்டினாலும்கூட தேர்தல் பணிமனையை சூறையாடினாலும்கூட பாஜக மிகப்பெரிய மாற்றத்தை தமிழகத்தில் கொண்டு வரும். ஆளும் கட்சி இந்த விஷயத்தில் ஒரு சுய பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும். 

ADVERTISEMENT

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. இதற்கு உதாரணமாகவே பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. 

பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் நீட் தேர்விற்காக பாஜக அலுவலகத்தில் குண்டு வீசினார் எனக் கூறுவது நகைச்சுவையாக இருக்கிறது. 

இவர்கள்(திமுக) ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையை செய்தது என்னுடைய பாதுகாப்பை குறைத்தது. 'ஒய்' பாதுகாப்பில் இருந்து 'எக்ஸ்' பாதுகாப்பிற்கு குறைக்கப்பட்டுள்ளது. எனக்கும் என் வீட்டுக்கும் இப்போது ஒரே ஒரு துப்பாக்கி ஏந்திய காவலர் மட்டுமே இருக்கிறார். எனக்கும் அதுவும் கூட தேவையில்லை. 

என்னுடைய தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுகிறது. குறிப்பாக, தமிழக உளவுத்துறை, போனை 'பக்' செய்வது, என்னைச் சுற்றி வருவது, உடன் இருப்பவர்களை வைத்துக் கண்காணிப்பது என ஒட்டுக்கேட்பின் அடுத்த நிலைகளுக்குச் சென்றுவிட்டது. 

அடுத்ததாக, பாஜக அலுவலகம் இருக்கும் இந்த சாலையில் இருபுறமும் உள்ள பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளது. இதையெல்லாம் நீங்களே யோசித்துப் பார்த்துக்கொள்ளுங்கள்

ஆனால், இதற்கெல்லாம் பணிந்து போகும் ஆள்கள் நாங்கள் இல்லை. எதற்காக இப்படி செய்தார்கள் என்பதை அரசு தான் கூற வேண்டும். 

தொலைபேசி ஒட்டுகேட்கப்படுகிறது என்பதற்கு பொதுவெளியிலே பல ஆதாரங்கள் இருக்கின்றன. உளவுத்துறை நான் பேசும் ஒரு மெசேஜை எடுத்து செயலில் உள்ள ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் அனுப்பி 'பிரேக்கிங்' என்று வெளியிடுகிறார்கள். தமிழகத்தில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது' என்று கூறியுள்ளார். 

தமிழக பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் கைது

ADVERTISEMENT
ADVERTISEMENT