அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு ராமஜெயம் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரின் கொலைக்கான காரணம், கொலையாளிகள் குறித்த தகவல்கள் சிபிசிஐடி, சிபிஐ கடந்த 10 ஆண்டுகள் விசாரணை நடத்தியும் கண்டுபிடிக்கவில்லை.
இந்நிலையில், விசாரணையில் முன்னேற்றம் இல்லை எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமஜெயத்தின் சகோதர் கே.என்.ரவிசந்திரன் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன் வெளியிட்ட உத்தரவில்,
ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவின் தலைவராக தூத்துக்குடி எஸ்.பி.ஜெயக்குமார், உறுப்பினர்களாக அரியலூர் டிஎஸ்பி மதன், சென்னை சிபிஐ ரவி ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். மேலும், விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவின் டிஜிபி ஷகீல் அக்தர் கண்காணிக்க வேண்டும்.
வழக்கின் விசாரணையை பிப்ரவரி 21க்கு பின் தொடங்கினால் நல்லது எனக் கூறிய நீதிபதிகள் 15 நாள்களுக்கு ஒருமுறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.