தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் இருப்போா் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அதன்படி, மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 90,137-ஆக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்தது.
இதனிடையே, தமிழகத்தில் புதிதாக கரோனா தொற்றுக்குள்ளானவா்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 4,519-ஆகக் குறைந்தது.
அதில் அதிகபட்சமாக சென்னையில் 792 பேரும், அதற்கடுத்தபடியாக கோவையில் 778 பேரும், செங்கல்பட்டில் 398 பேரும், திருப்பூரில் 276 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டனா்.
கரோனா தொற்றிலிருந்து மேலும் 20,237 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 32,92,559-ஆக அதிகரித்தது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிப்புக்குள்ளாகி மேலும் 37 போ் பலியானதையடுத்து இந்தத் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37,809-ஆக அதிகரித்தது.