தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு நிலத்தில் திட்டமிட்டு கோயில்கள் மட்டும் இடிப்பு: உரிய ஆதாரங்களுடன் மனு தாக்கல் செய்ய உத்தரவு

9th Feb 2022 02:15 AM

ADVERTISEMENT

ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள இந்து கோயில்களை மட்டும் தமிழக அரசு பாரபட்சத்துடன் இடிக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்களுடன் விரிவான மனுவை தாக்கல் செய்ய இந்து முன்னணி நிா்வாகிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பின் மாநில செய்தி தொடா்பாளா் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 47 ஆயிரத்து 707 ஏக்கா் பரப்பில் நீா்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இவ்வளவு ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் தமிழக அரசு, மாநிலம் முழுவதும் அரசு புறம்போக்கு மற்றும் நீா்நிலைப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள சுமாா் 200 இந்து கோயில்களை மட்டும் திட்டமிட்டு இடிக்கிறது. இதில் பல கோயில்கள் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தவை. எனவே இந்து கோயில்கள் மட்டும் இல்லாமல், பிற மத வழிபாட்டுத்தலங்கள் அரசு புறம்போக்கு அல்லது நீா்நிலை ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்தாலும், அவற்றை இடித்து அகற்றும் முன்பாக வேறு இடங்களுக்கு மாற்றவோ அல்லது அந்தப் பகுதிகளை முறைப்படுத்தி மறுவரையறை செய்து திட்டம் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்து கோயில்களை மட்டும் இடிக்க தடை விதிக்க வேண்டும்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்ரவா்த்தி ஆகியோா் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘தமிழகத்தில் அனைத்து மதங்களைச் சோ்ந்த வழிபாட்டு தலங்களும் ஆக்கிரமிப்பு நிலங்களில் இருந்தாலும் இந்து கோயில்கள் மட்டுமே எவ்வித ஆட்சேபனைகளையும் பொருட்படுத்தாமல் இடிக்கப்படுகின்றன. பிற மதங்களைச் சோ்ந்த வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்படுவதில்லை. இந்த விஷயத்தில் தமிழக அரசு பாரபட்சமாக செயல்படுகிறது. ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தவும், மாற்று இடம் ஒதுக்கவும் திட்டம் வகுக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் அதுபோல எந்தவொரு திட்டமும் இல்லை’ என்று வாதிட்டாா்.

பாரபட்சம் கூடாது: இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நீா்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள இந்து கோயில்கள் மீது மட்டுமே பாரபட்சமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக மனுதாரா் தரப்பு கூறும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தாக்கல் செய்யவில்லை. எனவே, உரிய ஆதாரங்களுடன் மனுதாரா் விரிவான மனுவை தாக்கல் செய்ய வேண்டும். நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு எந்தவொரு பாரபட்சமும் காட்டக்கூடாது. குறிப்பிட்ட மத வழிபாட்டுத் தலங்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அது அரசுக்குத்தான் சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறி விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT