தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே ஏறத்தாழ 95 ஆண்டுகள் பழைமையான சுதர்சன சபாவை தனியாரிடமிருந்து மாநகராட்சி நிர்வாகம் செவ்வாய்க்கிழமை மீட்டது.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே சுதர்சன சபா 40,793 சதுர அடிப் பரப்பளவில் கட்டப்பட்டு 1927 டிசம்பர் 14ஆம் தேதி திறக்கப்பட்டது. மாநகராட்சிக்குச் சொந்தமான இந்த சபா ஆண்டு வாடகை அடிப்படையில் 99 ஆண்டுகள் குத்தகைக்குத் தனியாருக்கு மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.
ஒரு காலத்தில் நாடகம், இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடமாக இருந்தது. ஆனால், இந்த சபாவில் பல ஆண்டுகளாகக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது பெருமளவு குறைந்துவிட்டது. இந்த சபா திமுக பிரமுகர் கட்டுப்பாட்டிலிருந்து வந்தது. இந்நிலையில், குத்தகை விதிமுறையை மீறி இந்த சபாவின் ஒரு பகுதியில் கட்டடம் கட்டப்பட்டு, உணவகம், மதுபானக்கூடம், பேக்கரி, கைப்பேசி உள்ளிட்ட கடைகளுக்கு உள் வாடகை விடப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இதன் பேரில், மாநகராட்சி அலுவலர்கள் சில மாதங்களுக்கு முன்பு உள் வாடகைக்கு விடப்பட்டிருந்த கடைகளைப் பூட்டி சீல் வைத்து, பின்னர் கையகப்படுத்தினர். இந்நிலையில், விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகத் தனியாரிடமிருந்து சுதர்சன சபாவையும் மாநகராட்சி ஆணையர் க.சரவணகுமார் உத்தரவின் பேரில், தமிழ்நாடு பொது வளாகங்கள் (ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) சட்டம் 1975}ன் படி மாநகராட்சி உதவிச் செயற் பொறியாளர் எம். ராஜசேகரன், பொறியாளர்கள் கண்ணதாசன், மகேந்திரன் உள்ளிட்டோர் செவ்வாய்க்கிழமை கையகப்படுத்தினர். பின்னர், இது தொடர்பாக தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டது. இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ஏறத்தாழ ரூ.100 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.