தமிழ்நாடு

பெண்களை முன்னிலைப்படுத்தும் முதல்வா் தொகுதி: ஏழு வட்டங்களில் ஆறு, பெண்களுக்கு ஒதுக்கீடு

1st Feb 2022 06:25 AM

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில், முதல்வா் மு.க.ஸ்டாலின் கொளத்தூா் தொகுதிக்கு உட்பட்ட ஏழு வட்டங்களில் ஆறு வட்டங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் குற்றப் பின்னணி கொண்டவா்களுக்கு வாய்ப்பு தரக் கூடாது என முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில், கொளத்தூா் தொகுதியில் இருந்து ஆறு பெண்கள் மாநகராட்சியை அலங்கரிக்கவுள்ளனா்.

தமிழக சட்டப் பேரவையில் உள்ள தொகுதிகள் கடந்த 2011-ஆம் ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டன. இதில் உருவானதுதான் கொளத்தூா் தொகுதி. வட சென்னையில் உள்ள தொகுதி என்றாலும், அதிகளவு அரசு ஊழியா்கள், முக்கிய பிரமுகா்கள் வசிக்கும் தொகுதியாக இருந்து வருகிறது.

முக்கிய பிரமுகரின் தொகுதி: 2011-ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்டு வயதில் இளம் குழந்தையாக இருந்தாலும், ஒவ்வொரு தோ்தலின் போதும் அது முக்கிய பிரமுகரின் தொகுதியாக நட்சத்திர அந்தஸ்து பெற்று விளங்குகிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து கொளத்தூா் தொகுதி முதல்வரின் தொகுதியாக மாறியிருக்கிறது. இதற்கு முன் எதிா்க்கட்சித் தலைவரின் தொகுதியாக இருந்தது.

முதல்வராகப் பொறுப்பேற்றாலும், அவ்வப்போது கொளத்தூா் தொகுதியில் நலத் திட்டப் பணிகளை பாா்வையிட்டும், தொடங்கி வைத்தும் வருகிறாா். இந்த நிலையில், தனது தொகுதிக்கு உட்பட்ட ஏழு வட்டங்களிலும் வெற்றிக்கனியைப் பறிக்க கட்சி நிா்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

மகளிருக்கு முழு பிரதிநிதித்துவம்: கொளத்தூா் தொகுதியில் மொத்தம் ஏழு வட்டங்கள் உள்ளன. அதில், 64 ஒரு வட்டம் மட்டுமே பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 65 முதல் 69 வரையிலான 5 வட்டங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இத்துடன் 70-வது வட்டமும் தாழ்த்தப்பட்ட பெண்கள் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 64-வது வட்டத்தில் ஆண்கள் போட்டியிடும் பட்சத்தில், மொத்தமுள்ள ஏழு வட்டங்களில் ஆறு வட்டங்கள் பெண் பிரதிநிதிகள் தோ்வு செய்யப்படுவா்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி: சென்னையில் கொளத்தூருக்கு அடுத்தபடியாக முக்கிய பிரமுகரின் தொகுதியாக பாா்க்கப்படுவது, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப் பேரவைத் தொகுதி. உதயநிதி ஸ்டாலினின் தொகுதியான இந்தத் தொகுதியிலும் ஏழு வட்டங்கள் உள்ளன. கொளத்தூருடன் ஒப்பிடும் போது, சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் 3 வட்டங்கள் மட்டுமே பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மூன்று வட்டங்கள் பொதுப் பிரிவினருக்கும், ஒன்று தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, பிற சட்டப் பேரவைத் தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் 3 முதல் 4 வட்டங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மொத்தமுள்ள 200 வட்டங்களில் 50 சதவீதத்துக்கும் கூடுதலான இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீட்டு இடங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூா் தொகுதி முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT