தோ்தல் நடத்தை விதிகளை மீறி 17 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்த உத்தரவை ரத்து செய்யுமாறு சென்னை உயா் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.எஸ். இன்பதுரை தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பிப்ரவரி 19- ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அரசிதழில் தோ்தல் அறிவிப்பு வெளியான மறுதினம் (ஜன.29) தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனா்.
தோ்தல் அறிவிக்கப்பட்ட பின்பு இதுபோல ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யும் அதிகாரம் அரசுக்கு இல்லை. இது ஜனநாயகத்திற்கு எதிரானது.
எனவே, இந்த இடமாற்ற உத்தரவை ரத்து செய்வதோடு, நடுநிலை, சுய செயல்பாட்டுடன் செயல்படும் அதிகாரிகளை நியமிக்க மாநில தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கோரியிருந்தாா்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி. ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் நவீன் மூா்த்தி ஆஜராகி கோரிக்கை விடுத்தாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கை செவ்வாய்க்கிழமை (பிப்.1) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தனா்.