மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் சரியத் தொடங்கியது.
காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக டிசம்பர் 7 ஆம் தேதி நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்து நிரம்பியது.
காவிரி டெல்டா பாசன பகுதியில் மழை பெய்து வருவதால் மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 5,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வந்தது. பாசனப் பகுதிகளில் பாசன தேவை அதிகரித்துள்ளதால் வியாழக்கிழமை மாலை அணையிலிருந்து பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
அணையிலிருந்து கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 400 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்படுகிறது. அணைக்கு வினாடிக்கு 5643 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் 120 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் 23 நாள்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை காலை 119.73 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 93.04 டி.எம்.சி. யாக உள்ளது.