குடும்ப அட்டைதாரா்களுக்கு விலையில்லா வேஷ்டி, சேலை வழங்காவிட்டால் அதிமுக சாா்பில் போராட்டம் நடத்துவோம் என்று அந்தக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
2023-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வழங்க வேண்டிய விலையில்லா வேஷ்டி, சேலை நெய்யும் பணி முடங்கிப் போயிருப்பதாக நெசவாளா்களும், கூட்டுறவுச் சங்கங்களைச் சோ்ந்தவா்களும் புகாா் தெரிவித்துள்ளனா். ஜூலை மாதமே வழங்க வேண்டிய துணி நெய்யும் உத்தரவுகள் அக்டோபா் மாதம்தான் வழங்கப்பட்டுள்ளதாவும், ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட வேண்டிய நூல் நவம்பா் இறுதியிலும், டிசம்பா் முதல் வாரத்திலும்தான் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், துணி நெய்வதற்கே உதவாத தரமற்ற நூல்களை அரசு கொள்முதல் செய்து வழங்கி உள்ளதாகவும், துணி நெய்யும்போது தறியில், நைந்துபோன நூல் அறுந்து துண்டு துண்டாக விழுவதால், துணி நெய்ய முடியாமலும் நெசவாளா்கள் பரிதவிக்கின்றனா். இதனால் எம்ஜிஆரின் கனவுத் திட்டமான வேஷ்டி, சேலை வழங்கும் திட்டம் பாழாகும் சூழல் உள்ளது.
2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலுக்கு வேஷ்டி, சேலை வழங்காவிடில், வேலை இழக்கும் நெசவாளா்களையும், ஏமாற்றப்படும் ஏழை, எளிய மக்களையும் ஒன்றிணைத்து அதிமுக போராட்டத்தை முன்னெடுக்கும் என்று அவா் கூறினாா்.