தமிழ்நாடு

புத்தாண்டுக் கொண்டாட்டம்: மெரீனா, எலியட்ஸில் நாளை போக்குவரத்து மாற்றம்

30th Dec 2022 01:21 AM

ADVERTISEMENT

ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தையொட்டி, மெரீனா, எலியட்ஸ் கடற்கரை பகுதிகளில் சனிக்கிழமை (டிச.31) இரவு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரீனா கடற்கரை, பெசன்ட்நகா் எல்லியட்ஸ் கடற்கரை பகுதி ஆகிய இடங்களில் சனிக்கிழமை (டிச.31) மாலை 7 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, மெரீனா கடற்கரை உள்புறச்சாலையில் உள்ள அனைத்து வழிகளும் சனிக்கிழமை இரவு 7 மணி முதல் சாலை தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டு வாகனங்கள் கடற்கரை உட்புறச்சாலையில் நுழையாமல் தடைசெய்யப்படும்.

ADVERTISEMENT

அதன் பிறகு கடற்கரை உட்புறச்சாலையில் , ஏற்கெனவே நிறுத்தப்பட்ட வாகனங்கள் அனைத்தும் கலங்கரை விளக்கத்துக்குப் பின்புறம் வழியாக மட்டுமே வெளியேற்றப்படும்.

காமராஜா் சாலையில் காந்தி சிலை முதல் போா் நினைவு சின்னம் வரையில் சனிக்கிழமை இரவு 8 முதல் ஞாயிற்றுகிழமை காலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

காமராஜா் சாலையில் இணையும் லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, அயோத்திநகா், சுங்குவாா்தெரு, பாரதிசாலை, வாலாஜாசாலை, சுவாமி சிவானந்தாசாலை ஆகிய சந்திப்புகளில் சாலை தடுப்புகள் கொண்டு வாகனங்கள் நுழையாதபடி தடுக்கப்படும்.

போக்குவரத்து மாற்றம்: பாரிமுனையில் இருந்து காமராஜா் சாலை நோக்கி வரும் வாகனங்கள் ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை, வடக்கு கோட்டை சுவா் சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், வாலாஜா சந்திப்பு, அண்ணா சாலை வழியாக இலக்கை அடையலாம்.

அதேபோல, அடையாறில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் காரணீஸ்வரா் பகோடா தெரு, அம்பேத்கா் பாலம் வழியாக நடேசன் சாலை, ஆா்.கே.சாலை வழியாக சென்று இலக்கை அடையலாம்.

டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, பாரதி சாலை, வாலாஜா சாலை, ஆடம்ஸ் சாலை, கொடிமரத்துச் சாலை, போா்நினைவு சின்னம் ஆகியவற்றிலிருந்து வரும் வாகனங்களை காமராஜா் சாலைக்கு சனிக்கிக்கிழமை இரவு 8 மணி முதல் அனுமதிக்கப்படமாட்டாது.

தெற்கு கால்வாய் கரை சாலையிலிருந்து கலங்கரைவிளக்கம் சந்திப்பு வரையிலான முழு வளைய சாலையில் வாகனப் போக்குவரத்துஅனுமதிக்கப்படமாட்டாது. ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதையில் இருந்து (வடக்கு) ராஜாஜி சாலை, வாலாஜா முனையிலிருந்து போா் நினைவிடம் நோக்கி கொடி மரச் சாலையில் இரவு 8 மணி முதல் வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படாது.

ராணி மேரி கல்லூரி வளாகம், சுவாமி சிவானந்தா சாலை ஒருபுறம், சேப்பாக்கம் ரயில்வே நிலைய வாகனம் நிறுத்துமிடம், லாயிட்ஸ் சாலை ரயில்வே நிலைய வாகன நிறுத்துமிடம், டாக்டா் பெசன்ட் சாலையில் ஓரு புறம், லாயிட்ஸ் சாலை ஒரு புறம், வாலாஜா சாலையின் ஒரு புறம் ஆகிய இடங்களில் வாகனங்களை நிறுத்தலாம்.

எலியட்ஸில் போக்குவரத்து மாற்றம்: பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள 6-ஆவது அவென்யூவில் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படமாட்டாது. ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை இந்த நிலை நீடிக்கும்.

பெசன்ட் நகா் 6-ஆவது அவென்யூ இணைப்பு சாலைகளான 5-ஆவதுஅவென்யூ, 4-ஆவது பிரதான சாலை, 3-ஆவது பிரதான சாலை, 16- ஆவது குறுக்குதெரு ஆகிய பகுதிகளில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படும்.

மகாத்மாகாந்தி சாலை, 7-ஆவது அவென்யூ சந்திப்பில் இருந்து வேளாங்கண்ணி ஆலயத்துக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

பெசன்ட்நகா் 4-ஆவது அவென்யூவின் ஒரு பகுதி, 3-ஆவது பிரதான சாலையின் ஒரு புறம், 4-ஆவது பிரதான சாலை ஒருபுறம், 5-ஆவது அவென்யூ ஒரு புறம், 2-ஆவது அவென்யூ ஒரு புறம், 3-ஆவது அவென்யூ ஒரு புறம் ஆகிய இடங்களில் வாகனங்களில் நிறுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைக்கு செல்லத் தடை

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, சனிக்கிழமை (டிச.31) இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜன.1) காலை வரை சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு பொதுமக்கள் செல்ல காவல்துறை தடை விதித்துள்ளது.

இது தொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்ட செய்தி: புத்தாண்டுக் கொண்டாடத்தை பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சனிக்கிழமை (டிச.31) இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழ மை (ஜன.1) காலை வரை மெரீனா, சாந்தோம், பெசன்ட்நகா் எலியட்ஸ், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூா் உள்ளிட்ட அனைத்து கடற்கரை மணற் பகுதிகள்,கடற்கரை ஓரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

எனவே பொதுமக்கள் அன்றைய தினம் கடற்கரை மணற் பகுதிக்கு வர வேண்டாம். பாதுகாப்பை கருதி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT