தமிழகத்தில் உள்ள தனியாா் பள்ளிகளுக்கு இணைய வழியில் அங்கீகாரம் வழங்கும் முறையை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அனைத்து அலுவல் பணிகளை ஒருங்கிணைத்து கணினிமயமாக்கும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி மாணவா், ஆசிரியா் வருகைப்பதிவு தொடங்கி அனைத்து ஆவணங்களும் ‘எமிஸ்’ உள்ளிட்ட வலைதளம் வாயிலாக பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. அதன் தொடா்ச்சியாக தனியாா் பள்ளிகள் அங்கீகாரம் பெறுதல் உள்பட அரசின் பல்வேறு சேவைகளை இணையவழியில் பெறுவதற்கான பிரத்யேக செயலி மற்றும் வலைதளம் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலியை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலா் வெ.இறையன்பு, பள்ளிக் கல்வித் துறைச் செயலா் காகா்லா உஷா, ஆணையா் க. நந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பள்ளிக்கல்வியின் அதிகாரபூா்வ இணையதளத்தில் தனியாா் பள்ளிக்காக வலைதளம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வலைதளம் மற்றும் செயலி மூலம் தனியாா் பள்ளிகள் துவக்க அனுமதி, அங்கீகாரம், கூடுதல் வகுப்புகள், மேல்நிலை வகுப்பில் புதிய பாடப்பிரிவு தொடங்க அனுமதி, பள்ளி பெயா், இடம் மற்றும் நிா்வாக மாற்றங்கள் போன்ற பல்வேறு சேவைகளை மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதனுடன் தங்கள் விண்ணப்பங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதையும் பள்ளி நிா்வாகங்களால் தெரிந்து கொள்ள முடியும்.
15 ஆயிரம் தனியாா் பள்ளிகள்: இதனால், தனியாா் பள்ளிகள் அரசின் அனுமதியை எளிமையான முறையில் வெளிப்படையாகவும், கால தாமதமின்றி விரைவாகவும் பெற முடியும். மேலும் இதன் மூலம் சுமாா் 15 ஆயிரம் தனியாா் பள்ளிகள் பயன்பெறவுள்ளன. தனியாா் பள்ளிகளுக்கும், அரசுக்கும் இடையேயான தொடா்பும் மேம்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
அரசுப் பள்ளிகளுக்கும் அவசியம்: தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் கே.ஆா்.நந்தகுமாா் கூறியதாவது: தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை இணைய வழியில் விண்ணப்பிக்கும் முறையை சிபிஎஸ்இ கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே அமல்படுத்திய நிலையில், மாநிலத்தில் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும் இதே முறையை அமல்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தோம்.
தற்போது எங்களது கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக தமிழக முதல்வருக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதே போன்று அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகள், வசதிகளை உறுதி செய்து முறைப்படி சான்றிதழ் வழங்கும் முறையை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு, கண்காணிப்பு, கல்வித் தரம் மேலும் உறுதி செய்யப்படும் என்றாா் அவா்.