தமிழ்நாடு

காவல் துறை கட்டடங்கள்-விசைப் படகுகளில் இருவழி தகவல் தொடா்பு கருவி: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

30th Dec 2022 11:44 PM

ADVERTISEMENT

தமிழக காவல் துறைக்காக கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதிய கட்டடங்களை அவா் காணொலி வழியாகத் திறந்து வைத்தாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை காவல் துறை ஆற்றி வருகிறது. இந்தத் துறையில் பணியாற்றி வருவோரின் பணிகள் சிறக்கும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் செய்யப்பட்டு வருகின்றன. புதிய காவல் நிலையங்கள், காவலா் குடியிருப்புகள் கட்டுதல், ரோந்து வாகனங்கள் கொள்முதல் செய்தல், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சென்னை மாவட்டம் முத்தாப்புதுப்பேட்டை, திருநெல்வேலி மாவட்டம் மானூா், திருப்பூா் மாவட்டம் திருமுருகன்பூண்டி ஆகிய இடங்களில் புதிய காவல் நிலைய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. சென்னை மாவட்டம், ஆவடியில் காவலா் சமுதாயநலக் கூடம், தருமபுரியில் மாவட்ட காவல் அலுவலக இணைப்புக் கட்டடம், திருவாரூா், கோவையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிக்கான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் க.பணீந்திர ரெட்டி, காவல் துறை தலைமை இயக்குநா் செ.சைலேந்திர பாபு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சீமா அகா்வால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

விசைப்படகுகளுக்கு புதிய கருவி: நடுக்கடலில் மீனவா்களுக்கு உதவிடும் வகையில், இருவழி தகவல் பரிமாற்ற கருவியை விசைப் படகுகளில் பொருத்தும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

விசைப் படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்களின் வசதிக்காக, இருவழி தகவல் பரிமாற்ற கருவியை, (டிரான்ஸ்பாண்டா்) இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ளது. நிலப் பரப்பிலிருந்து இந்தக் கருவி மூலமாக படகுகளுடன் இருவழி செய்தி பரிமாற்றத்தை மேற்கொள்ளலாம். கருவியை படகில் பொருத்தி புளூடூத் வாயிலாக அதனை கைப்பேசியுடன் இணைக்கலாம். இதற்கென உள்ள செயலி வழியாக தகவல்களைப் பெறலாம்.

விசைப் படகில் கருவியைப் பொருத்துவதால், புயல், சூறாவளி மற்றும் பெருமழை போன்ற ஆபத்தில் இருக்கும் போது ஆழ்கடலில் இருந்து படகின் உரிமையாளருக்கும், மீன்வளத் துறையின் மத்திய கட்டுப்பாட்டு அறைக்கும் அவசர செய்தி அனுப்ப முடியும். கரையிலுள்ள மீன்வளத் துறை அதிகாரிகள், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் படகு உரிமையாளா்கள் அவசர செய்தியைப் பெறவோ, அவசர செய்தியை படகுக்கு அனுப்பவோ முடியும்.

மேலும், அதிக மீன் கிடைக்கும் இடங்கள், காலநிலை, வானிலை நிலவரங்கள் ஆகியவற்றை அவ்வப்போது படகுக்கு அனுப்ப இயலும். ஆழ்கடலில் படகு நிலைகொண்டுள்ள இடத்தை துல்லியமாகக் கண்டறிந்து ஆபத்து காலங்களில் உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

மீனவா்களுக்கு பயனளிக்கும் வகையிலான கருவிகளை வழங்கும் நிகழ்ச்சியில், மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் ந.கெளதமன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT