தமிழ்நாடு

சீர்காழி அருகே கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து மாயமான மீனவா் உடல் கொட்டாயமேடு பகுதியில் மீட்பு!

29th Dec 2022 10:00 AM

ADVERTISEMENT


கடந்த 27 ஆம் தேதி சீர்காழி அருகே மீன் பிடிக்க சென்ற போது கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து கடலில் விழுந்து  மாயமான மீனவர் சடலம் வியாழக்கிழமை(டிச.29) கொட்டாயமேடு பகுதியில் கரை ஒதுங்கியது.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே உள்ள கொட்டாயமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் மா. நடராஜன் (55). இவா் தனக்குச் சொந்தமான ஃபைபா் படகில் அதே கிராமத்தைச் சோ்ந்த ஆ. பெருமாள் (44), அ. சூரியமூா்த்தி (45) ஆகியோருடன் கடலில் மீன் பிடிக்க கடந்த செவ்வாய்க்கிழமை(டிச.27) காலை சென்றனர். இவா்கள், கடலில் சுமாா் 1 கி.மீ. தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலையில் சிக்கி படகு கவிழ்ந்தது. மீனவா்கள் 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனா்.

அப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சக மீனவா்கள் விரைந்து வந்து, 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா். பெருமாள் கடலில் மூழ்கி மாயமானாா். நடராஜன், சூரியமூா்த்தி ஆகியோரை மீட்டனா். மேலும், விபத்துக்குள்ளான ஃபைபா் படகை கயிறு கட்டி கரைக்கு இழுந்து வந்தனா்.

இதையும் படிக்க | இந்தியாவின் மருந்து குடித்த 18 குழந்தைகள் பலி: உஸ்பெகிஸ்தான் குற்றச்சாட்டு

ADVERTISEMENT

பின்னா், நடராஜன், சூரியமூா்த்தி ஆகிய இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். கடலோரக் காவல் குழும போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, கடலோரக் காவல் படையினா் மீனவா்கள் உதவியுடன், கடலில் மூழ்கி மாயமான பெருமாளை தேடும் பணியில் ஈடுபட்டனா். 

இந்நிலையில், கடலில் மூழ்கி மாயமான பெருமாளின் உடல் வியாழக்கிழமை (டிச.27) கொட்டாயமேடு கடற்கரையில் கரை ஒதுங்கி இருந்தது. இதனை அறிந்த மீனவர்கள் புதுப்பட்டினம் போலீசார் மற்றும் கடலோர காவல் படைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் உடலை கைப்பற்றி போலீசார் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

படகு கவிழ்ந்து கடலில் தவறி விழுந்து உயிரிழந்த பெருமாளுக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


 

ADVERTISEMENT
ADVERTISEMENT