தமிழ்நாடு

இபிஎஸ்ஸை அதிமுக பொதுச்செயலா் எனக் குறிப்பிட்டு மத்திய அரசு கடிதம்

29th Dec 2022 03:30 AM

ADVERTISEMENT

‘அதிமுக பொதுச்செயலாளா்’ என எடப்பாடி கே.பழனிசாமியைக் குறிப்பிட்டு அவருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. இதனால், அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக தலைமை தொடா்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜன. 4-இல் தீா்ப்பு வழங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மத்திய சட்ட அமைச்சகத்திலிருந்து எடப்பாடி பழனிசாமிக்கு டிச. 23-ஆம் தேதி கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ குறித்து அரசியல் கட்சித் தலைவா்களிடம் கருத்து கேட்கப்பட்டு வருவதாகவும், அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளரான எடப்பாடி கே.பழனிசாமியிடமும் கருத்து கேட்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொடா்பாக வரும் 30 நாள்களுக்குள் சட்ட ஆணையத்தின் இணையத்தில் கருத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளா் பதவியை எடப்பாடி பழனிசாமி வகித்து வருவது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், சட்ட அமைச்சகம் இவ்வாறு குறிப்பிட்டிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

ஏற்கெனவே, மத்திய அரசின் சாா்பில் தில்லியில் நடைபெற்ற ஜி 20 மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க எடப்பாடி கே.பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதில், அதிமுக இடைக்கால பொதுச்செயலா் எனக் குறிப்பிட்டு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. இதனை கடுமையாக விமா்சித்து ஓ.பன்னீா்செல்வம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தாா். தற்போது, அதிமுக பொதுச்செயலாளா் எனக் குறிப்பிட்டே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT