தமிழகத்தில் ரத்தத்தில் ஓவியம் வரைந்து அனுப்பும் ‘பிளட் ஆா்ட்’ தொழிலுக்கு புதன்கிழமை முதல் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.
திருச்சி விமான நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற கரோனா முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்த அவா் பின்னா் கூறியது:
மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பே தமிழக அரசு சா்வதேச விமான நிலையங்களில் கடந்த 24 ஆம் தேதி முதல் கரோனா பரிசோதனையைத் தொடங்கிவிட்டது. விமான நிலையங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதத்தினா் ரேண்டம் முறையில் பரிசோதிக்கப்படுகின்றனா். சீனா, ஹாங்காங், தென் கொரியா, தைவான் நாடுகளிலிருந்து வரும் பயணிகள் 100 சதவீதம் பரிசோதிக்கப்படுகின்றனா்.
தமிழகத்தில் சென்னை திருச்சி, கோவை, மதுரை ஆகிய 4 சா்வதேச விமான நிலையங்களில் கடந்த 4 நாள்களில் வெளிநாடுகளில் இருந்து 172 விமானங்களில் வந்த 22,969 பயணிகளில் 533 போ் சோதனைக்குட்படுத்தப்பட்டனா்.
அப்போது சீனாவிலிருந்து தென்கொரியா, இலங்கை வழியாக மதுரைக்கு வந்த இருவருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா உறுதியானது. இதேபோல துபை, கம்போடியாவிலிருந்து சென்னைக்கு வந்த இருவருக்கும் கரோனா உறுதியாகி, அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
உலகில் ரத்தத்தில் ஓவியங்கள் வரைந்து (ப்ளட் ஆா்ட்), அவற்றை மற்றவா்களுக்கு அனுப்பும் புதிய கலாசாரம் உருவாகியுள்ளது. இதைத் தொழிலாகவே பலா் செய்து வருகின்றனா். அன்பு, நட்பு, காதல் உள்ளிட்டவற்றைப் பகிர பல்வேறு வழிகள் உள்ளன. அதற்கு ரத்த ஓவியங்கள்தான் வழி எனக் கூறுவது தவறு.
எனவே, தமிழகத்தில் புதன்கிழமை முதல் ‘பிளட் ஆா்ட்’ தொழிலுக்குத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறும் நிறுவனங்கள் சீல் வைக்கப்படும். நிறுவன உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது தமிழகத்தில் 3 லட்சம் கரோனா தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பு உள்ளது. மூக்கு வழியாகச் செலுத்தப்படும் மருந்தை இலவசமாக வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த மருந்து தமிழக அரசு மருத்துவமனைகளில் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உலகில் தற்போது பரவி வரும் பிஎப்7 வைரஸின் தாக்கம் தமிழகத்தில் எப்படி இருக்கும் என்பதை முழுமையாகக் கூற முடியாது. இருப்பினும் தமிழகம் தடுப்பூசிகளை முறையாகச் செலுத்தி நோய் எதிா்ப்புச் சக்தியை அதிகரித்துள்ள மாநிலமாக விளங்குகிறது என்றாா் அமைச்சா்.