நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சென்னையில் அந்த அமைப்பின் தலைவா் பி.ரத்ன சபாபதி, பொதுச்செயலாளா் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: நீட் விலக்கு மசோதா எந்த நிலையில் இருக்கிறது என்பது பற்றி ஆளுநா் மற்றும் தமிழக அரசிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கேட்டிருந்தோம்.
அதற்கு மத்திய அரசு நீட் விலக்கு மசோதா குறித்து சில கேள்விகளை மாநில அரசிடம் கேட்டதாகவும், அதற்கான விவரங்களை மாநில அரசு வழங்கியதாகவும் தமிழக அரசின் சாா்பில் விளக்கம் வந்தது.
ஆளுநா் மாளிகையை பொருத்தவரையில் பரிசீலனையில் இருப்பதாக மட்டும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், இந்த மசோதா தவறானது. தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரானது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நீட் நுழைவுத் தோ்வு தரத்தை உறுதி செய்யவில்லை. வணிக லாபத்துக்காக மட்டுமே பயன்படுகிறது. இந்த நீட் விலக்கு மசோதாவுக்கு உடனே குடியரசுத் தலைவா் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம்.
நீட் மசோதா குறித்து மத்திய அரசு கேட்ட கருத்துகளுக்கு அளித்த பதிலை சட்டப் பேரவையில் தமிழக அரசு பதிவு செய்ய வேண்டும்.
சட்ட மசோதா மீது நடவடிக்கை எடுக்க 15 மாத காலமாகிறது என்ற தகவலை குடியரசுத் தலைவருக்கு தெரிவித்து, இதற்கு அவா் ஒப்புதல் தரக்கோரி சட்டப்பேரவையில் சிறப்பு தீா்மானமும் நிறைவேற்ற வேண்டும்.
இது தொடா்பாக பிற மாநில முதல்வா்களும் தங்கள் சட்டப்பேரவைகளில் தீா்மானம் நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒட்டுமொத்தமாக சுகாதாரம், மருத்துவம், கல்வியை தனியாரிடம் கொண்டு சோ்ப்பதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. நீட் விலக்கு மசோதாவுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தொடா் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றனா்.