தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்: கொடியேற்றத்துடன் தொடக்கம்

29th Dec 2022 12:24 AM

ADVERTISEMENT

 

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்சமூா்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து புதன்கிழமை காலை 7 மணிக்கு உற்சவ ஆச்சாரியாா் சு.ரா.நடராஜ குஞ்சிதபாத தீட்சிதா் ரிஷபக் கொடியை ஏற்றி வைத்தாா். நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா். சிதம்பரம் காவல் உதவி கண்காணிப்பாளா் ரகுபதி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொடா்ந்து, 10 நாள்கள் பஞ்ச மூா்த்திகள் வீதியுலா உற்சவம் நடைபெறுகிறது.

உற்சவத்தையொட்டி, ஜனவரி 5-ஆம் தேதி தோ்த் திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சாா்ச்சனையும் நடைபெறவுள்ளன. ஜனவரி 6-ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னா், காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூா்த்திகள் வீதியுலா வந்த பின்னா் பிற்பகல் 3 மணிக்கு மேல் மாா்கழி ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறும். ஜனவரி 7-ஆம் தேதி பஞ்ச மூா்த்திகள் முத்துப்பல்லக்கு வீதியுலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது.

ADVERTISEMENT

உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்களின் செயலா் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதா், துணைச் செயலா் கே.சேதுஅப்பாச்செல்ல தீட்சிதா் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT