தமிழ்நாடு

ஆவினில் அதிமுக ஆட்சியை விட தற்போது விற்பனை அதிகரித்துள்ளது: முதல்வர் ஸ்டாலின்

18th Dec 2022 03:51 PM

ADVERTISEMENT

ஆவினில் அதிமுக ஆட்சியை விட தற்போது விற்பனை அதிகரித்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசரின் இல்லத் திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்து முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை, நாசர் இன்றைக்குப் பால்வளத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், பாராட்டக்கூடிய அளவிற்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் வந்தவுடன்
●    பால் விலை குறைந்துவிட்டது. அதுவே மக்களுக்கு எவ்வளவு பெரிய சாதகமான சூழல் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். அதுமட்டுமல்ல, ஆவினின் புதிய பால் பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டதும் இவர் அமைச்சராக இருக்கக்கூடிய நேரத்தில்தான்.
●   தீபாவளியின் போது நெய் விற்பனை அதிகமானது, புதிய இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
●   12 விதமான கேக் வகைகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
●   அதிமுக ஆட்சியில் தீபாவளியின் போது 55 கோடி ரூபாய்க்குத்தான் விற்பனை நடந்தது. ஆனால், கடந்த ஆண்டு நம்முடைய ஆட்சியில் 85 கோடி ரூபாயாகவும், இந்த தீபாவளியின்போது 116 கோடி ரூபாயாகவும் உயர்த்திக் காட்டியிருக்கிறார்கள். இது பெரிய சாதனை.
இதன் மூலமாக கடந்த ஆட்சியை விட பால் பொருட்கள் விற்பனை என்பது பல மடங்கு அதிகம் ஆகியிருக்கிறது.
இவை அனைத்திற்கும் முதல்வராக இருக்கக்கூடிய நான் மட்டும் காரணமல்ல, இந்தத் துறையின் அமைச்சராக இருக்கக்கூடிய நாசரும் ஒரு காரணம் என்பதை நான் இந்த நேரத்தில் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அதுமட்டுமல்ல,  பண்டிகைக் காலம் வந்துவிட்டால் போதும் நாசரே  தலையில் ஒரு தொப்பியை போட்டுக் கொண்டு, தொப்பி என்றால் முஸ்லீம்கள் போடும் தொப்பியை நான் சொல்லவில்லை. சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக சில பாதுகாப்புக்கு போடுவார்கள், அந்தத் தொப்பியை போட்டுக்கொண்டு, ஸ்வீன் தயாரிக்கிற இடத்தில் நாசர் நிற்கின்ற காட்சியை டிவியில் பார்த்து நானே ரசித்திருக்கிறேன். அந்தளவுக்குத் தன்னை எதிலும் முழுமையாக  ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றுபவர். 

இதையும் படிக்க- டிச.21, 22 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு

இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்துக்கு வந்திருக்கிறது என்று பிரபலமான ஆங்கில பத்திரிகையில் வெளிவந்த செய்திகளையெல்லாம் இங்கே சுட்டிக்காட்டினார்கள். நான் ஏற்கனவே சொன்னேன், கடந்த ஆண்டே குறிப்பிட்டுச் சொன்னேன். 'நம்பர் ஒன் முதல்வர் ஸ்டாலின்' என்று சொல்வதைவிட 'நம்பர் ஒன் தமிழ்நாடு' என்று சொல்ல வேண்டும், அதுதான் எனக்குப் பெருமை என்று சொன்னேன்.
இந்த ஆண்டு அது நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று சொன்னால், தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல, இங்கிருக்கக்கூடிய நம்முடைய அமைச்சர் பெருமக்கள் எல்லோருடைய கூட்டு முயற்சிதான் இன்றைக்கு இந்த பெற்றி நமக்குக் கிடைத்திருக்கிறது. அந்த வெற்றியிலே பங்கேற்கக் கூடியவர்களில் ஒருவராகத்தான் நாசர் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய இல்லத்தில் நடைபெறுகிற மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துவதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

Tags : cm stalin
ADVERTISEMENT
ADVERTISEMENT