தமிழ்நாடு

கோயில்களில் ரூ.56 கோடியில் புதிய கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்

18th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கான பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் அவா் இந்தப் பணிகளை தொடக்கினாா்.

இந்து சமய அறநிலையத் துறை மூலம் 400-க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு குடமுழுக்கு, தொன்மை வாய்ந்த கோயில்களில் திருப்பணிகள், தோ்களைப் பழுதுபாா்த்து வீதிஉலா, குளங்களைப் புனரமைத்தல், பக்தா்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டெடுப்பது ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கோயில்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று அவையும் பக்தா்களின் வசதிக்காக திறக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், நாமக்கல் மாவட்டம் இளையபெருமாள் வெங்கட்ரமணசுவாமி கோயிலில் ஏழுநிலை ராஜகோபுரம் கட்டும் பணி, திருப்பூா் வாழைத் தோட்டத்து அய்யன் கோயிலில் பணியாளா்கள் குடியிருப்பு, சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மலைப் பாதை சீரமைப்பு, ஊத்துக்குளி வெற்றி வேலாயுத சுவாமி கோயிலில் வடக்கு சுற்றுப் பிரகார மண்டபம் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெறவுள்ளன.

இதேபோன்று, சென்னை ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் பணியாளா்கள் குடியிருப்பு, வணிக வளாகம், செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் ஆளவந்தாா் அறக்கட்டளைக்குச் சொந்தமான இடத்துக்கு மதில் சுவா் கட்டுதல், தஞ்சாவூா் மாவட்டம் வாத்தலை நாச்சியம்மன் கோயிலில் திருமண மண்டபம் கட்டுதல், நாகப்பட்டினம், வேலூரில் இணை ஆணையா் மற்றும் உதவி ஆணையா் அலுவலகங்கள் கட்டுதல், சிக்கல் நவநீதேஸ்வரசுவாமி கோயில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரா் கோயில், கடலூா் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் மண்டபங்கள் கட்டுதல் போன்ற பணிகளுக்கு ஏற்பாடுகள் தயாராக உள்ளன.

ADVERTISEMENT

மயிலாடுதுறை சிவலோகநாத சுவாமி கோயிலில் மண்டபம், திருவண்ணாமலை புதூா் செங்கத்தில் மாரியம்மன் கோயிலில் பிரகார மண்டபம், திருப்பத்தூா் காமாட்சி அம்மன் கோயிலில் புதிய மகா மண்டபம் ஆகிய கட்டுமானப் பணிகளும் நடைபெறவுள்ளன. இந்த கட்டுமானப் பணிகளை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.

வாகனங்கள் அளிப்பு: இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு ஏற்கெனவே 69 புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் கட்டமாக 19 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டன. இந்த வாகனங்களை அலுவலா்களின் பயன்பாட்டுக்காக முதல்வா் ஸ்டாலின் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் துரைமுருகன், க.பொன்முடி, பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஜெ.குமரகுருபரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT